ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு 19 எம்.எல்.ஏ.க்களும் இன்று பதில் கொடுப்பார்கள்.
முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் தவறான தகவல்களை மத்திய அரசாங்கத்திடம் கொடுத்து போர்ஜரியாக செயல்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற லட்டர்பேடை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டும் அவர்கள் அதை பயன்படுத்தினார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனம் செல்லாது என்றெல்லாம் அவர்கள் போலியான தீர்மானத்தை போட்டார்கள்.
அதே போல் அன்றைக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழகத்திலே கூடியிருந்தார்கள் என்றனர். அன்றைக்கு 21 பேர் புதுவையில் இருந்தார்கள். 22 பேர் செல்லவில்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் செல்லவில்லை. அப்படி இருக்கையில் 122 பேர் எப்படி அங்கே ஆஜராகி இருக்க முடியும்.
சட்டமன்ற உறுப்பினர்களை குறைத்து காண்பித்தால் ஆட்சி போய்விடும் என்பதற்காக அவர்கள் போர்ஜரி வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இங்கிருந்து மத்திய அரசாங்கத்திடம் சென்று தவறான தகவல்களை சொல்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அன்றைக்கு பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக 86 பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார். அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். திறந்து விட்டால் வந்து விடுவார்கள் என்றார். ஆறேழு மாதங்கள் கழித்து கூட அவரிடம் இருந்துதான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்தாரே தவிர இங்கிருந்து யாரும் செல்லவில்லை.
புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் அங்கு அமர்ந்திருந்தால் தான் தமிழகத்தில் தியாகத்துக்கு ஏற்பட்டிருக்கிற சோதனைக்கு விடிவு கிடைக்கும்.
இன்றைக்கு முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தான் அவர்கள் அங்கு இருக்கிறார்கள். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் விட்டுவிட மாட்டோம். தனிப்பட்ட நலன் கருதியோ, பதவி ஆசையினாலோ நாங்கள் இதை செய்யவில்லை. துரோகம் வீழ்த்தப்பட வேண்டும்.
தமிழக மக்களை ஆள ஒரு நல்ல மனிதர், துரோக சிந்தனை இல்லாத மனிதரை நிச்சயம் தேர்ந்தெடுத்து முதல்வராக்க வேண்டும் என்பதுதான் எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோடான கோடி தொண்டர்களின் விருப்பமாகும்.
தமிழக அரசின் பின்னணியில் பா.ஜனதா உள்ளது. அது பின்னணியில் இருக்கும் வரை அரசை ஆதரிக்கமாட்டோம் என்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் சொல்லியிருப்பது ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான். அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல்வர் பதவியை விடக்கூடாது என்பதற்காக ஊழல் ஆட்சி என்று சொன்னவர்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எந்த நோக்கத்துக்காக அவரை முதல்வராக தேர்வு செய்தோமோ அதை மறந்துவிட்டு எங்களுக்கே துரோகம் செய்து இந்த கட்சி அழிந்தாலும் பரவாயில்லை. தொண்டர்கள் மனநிலை எப்படி இருந்தாலும் சரி. எப்படியாவது இந்த பதவியை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று செயல்படுகிறார்.
ஒரு வீட்டில் உள்ள சகோதரன் வெளிப்பழக்கத்திலே கெட்டு விட்டார் என்றால் அவரைத்தான் குறை சொல்ல முடியுமே தவிர அவர் யாரிடம் பழகினாரோ அவரை குறை சொல்ல முடியாது. அது தவறு.
எங்களால் தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முடியும். நான் என்று பேசுபவன் நானல்ல. 1½ கோடி தொண்டர்களின் செல்வாக்கும், ஏற்பும், சசிகலாவுக்கு தான் இருக்கிறது. அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நான் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். செல்கின்ற இடங்களில் எல்லாம் தொண்டர்கள் சொல்வதைத்தான் சொல்கிறேன். கட்சி எங்கள் பக்கம் தான் இருக்கிறது. கட்சியை பலப்படுத்திவிட்டேன்.
துரோகிகளை நிச்சயம் வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் வேலை. ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது. தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது. கட்சி தலைமையில் எந்த குழப்பமும் இல்லை.
புரட்சித் தலைவர் காலத்துக்கு பிறகு அம்மாவை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது 1991-ல் உறுதியானது. புரட்சித் தலைவர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் கட்சியை நடத்த முடியவில்லை. அம்மா கட்சியை வழிநடத்தினார்.
அம்மாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவின் முயற்சியால் இந்த ஆட்சி தொடர்ந்தது. பின்னர் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிரிகளுடன் கைகோர்த்ததால் எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை மாற்றும் இடத்தில் சசிகலா இருந்தார். இன்றைக்கு பழனிசாமியை முதல்வராக்கிய இடத்திலும் சசிகலா இருக்கிறார். இன்று தலைமை வலுவாக இருக்கிறது.
எங்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆட்சியை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியை குழப்ப பார்க்கிறார்கள். அதற்கு விடிவு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடிகர் விஷால் வீட்டுக்கு சென்ற டி.டி.வி.தினகரன் சமீபத்தில் திருமணமான விஷாலின் தங்கை, அவரது கணவர் உம்மிடிகணேஷ் ஆகியோரை நேரில் வாழ்த்தினார். அவரை விஷால் வரவேற்றார்.
பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேச்சு சுதந்திரத்தை தடுக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. இது தவறான அணுகுமுறை.
எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று கேட்கிறீர்கள். அதை பொறுத்து இருந்து பாருங்கள்.மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வரலாம். வருவதை வரவேற்கிறேன்.சகோதரர் விஷாலுக்கு தலைமை பண்பு உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.இவ்வாறு அவர் கூறினார்.