வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆளுநர் றெயினோல்கூரே யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வேலைத்திட்டத்தினை செய்து வருகின்றார்.
இன்றயதினமும் (30.08.2017) காலை 9 மணி முதல் சமூக மட்ட அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் அரச ஊழியர்கள், தொண்டர் ஆசிரிய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டோர் ஆளுநர் றெயினோல்கூரே அவர்களை சந்தித்து தமது கோரிக்கை கடிதங்களை கையளித்தனர்.
அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஆளுநர் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய பதில் வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அமைச்சரவை பத்திரத்தில் இடம்பிடிக்காத மேலும் 27 புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகள் ஆளுநரை இன்றய மக்கள் சந்திப்பின்போது சந்தித்து தங்களையும் பட்டியலில் உள்ளடக்க ஆவணை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.
ஏற்கனவே புனர்வாழ்வு பெற்ற 35 முன்னாள் போராளிகள் ஆளுநர் றெயினோல் கூரே மற்றும் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் ஒழுங்கு அமைப்பில் அமைச்சரவை பத்திரத்தில் உள்வாங்கப்பட்டு பட்டதாரிகள் நியமனத்தில் அவர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இன்றயதினம் ஆளுநரை மேலும் பல முன்னாள் போராளிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
இவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளுநர் றெயினோல்கூரே உங்களை போன்று மேலும் பலர் இதுவரையில் பெயர் விபரங்களை பதிவு செய்யாது இருந்தால் அவர்களையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஆளுநர் செயலகத்தில் தமது கோரிக்கை கடிதங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார்.