வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார்-தலைமன்னர் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.
கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியவாறும், பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
தனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல். எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் , மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் மற்றும் அருட்தந்தை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுமார் நூறு பேர் வரை மட்டுமே கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணிகளை மேற்கொண்டுவரும் ஒரு சில அமைப்புக்கள் இன்றைய தினம் மன்னாரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காது. தமது சுய நலத்திற்காக இன்று புதன் கிழமை வேறு மாவட்டத்தில் இடம் பெறும் போராட்டத்திற்கு மன்னாரில் இருந்து மக்களை அழைத்துச் சென்றுள்ளமை குறித்து மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.