சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ந் தேதி சென்ற ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளை போனது.இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசாருடன் இணைந்து மற்ற போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் ரெயிலில் பணப்பெட்டி பாதுகாப்புக்கு சென்ற சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் உள்பட 9 பேரிடமும் சிறப்பு புலனாய்வு அதிகாரி அமித்குமார் சிங் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.அப்போது ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது தொடர்பாக 9 பேரும் நடித்தும் காட்டினர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது தொடர்பாக எழுதியும் கொடுத்தனர். இவர்கள் 9 பேரும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி தலைமையிலான குழுவினரும் கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள்.இந்த குழுவினர் நேற்று மாலை சேலம் ரெயில் நிலையத்தில் பணப்பெட்டியை ஏற்ற ரெயில் பெட்டி நின்ற இடம், பணப்பெட்டியை ஏற்றிய ரெயில் சேலம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைத்து இழுத்து வந்து நிறுத்திய இடங்களையும் பார்வையிட்டார்.
பின்னர் சேலம் ஜங்சன் ரெயில் நிலைய துணை மேலாளர் இஸ்புல்லாவிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடந்தது. பணப்பெட்டி ஏற்றிய ரெயில் பெட்டி எங்கிருந்து வந்தது? இந்த பெட்டியில் எப்போது பணம் ஏற்றப்பட்டது? இந்த பணப்பெட்டிகளை யார், யார் ஏற்றினர்? பணப்பெட்டி ஏற்ற காண்டிராக்ட் கடிதம் கொடுத்தது யார் ? என்றும் துருவி துருவி விசாரித்தனர்.
இதையடுத்து பாயிண்ட் மேன்கள் இளங்கோவன், திவாகர் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. இவர்களிடம் சேலம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணப்பெட்டியை இணைத்த போது யார் யார்? பணியில் இருந்தனர், அப்போது புதிய ஆட்கள் யாரும் வந்து சென்றார்களா? என்பது உள்பட பல கேள்விகள் கேட்கப்பட்டது.
பின்னர் போர்ட்டர்கள் ஜெயக்குமார், நிதிஷ்குமார், ராமையா ஆகியேரிடம் விசாரணை நடந்தது. இவர்கள் கூறிய அனைத்து தகவல்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் சிலர் இன்று காலை மீண்டும் சேலம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து பணப்பெட்டி ஏற்றிய எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம், சேலம் டவுன் ரெயில் நிலையம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.இதனால் கொள்ளையர்கள் சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் ஏறி இருப்பார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் சேலம் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம், சேலம் டவுன் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சந்தேகப்படும்படி யாரும் ரெயிலில் ஏறினரா? பணப்பெட்டி சென்ற ரெயில் பெட்டி மற்றும் போலீசார் பாதுகாப்புக்கு சென்ற ரெயில் பெட்டிகளில் யார் யார் வந்து சென்றனர்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
இதுவிர ரெயில் சென்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் கேமராக்களில் சந்தேகப்டும்படி யாரும் சுற்றி திரிந்துள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.பணப்பெட்டி எடுத்து சென்ற ரெயில் பெட்டியின் மேற்கூரையை அறுத்து எடுத்த பகுதியில் சில கைரேகைகள் பதிவாகி உள்ளது. இதே போல கொள்ளையர்கள் எடுத்து சென்ற பணப்பெட்டியின் அருகில் இருந்த சில பண பெட்டிகளிலும் பதிவான கைரேகைகளை தடயமாக சேகரித்து அதனை பதிவு செய்து பழைய கொள்ளையர்கள் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தவிர சேலம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் டீ, காபி, பலகாரம் விற்பனையில் ஈடுபடுவோர், ரெயில்களில் பொருட்களை விற்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களிடமும் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே சேலம், சேத்துப்பட்டு, சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள செல்போன் டவர்களில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் அடிக்கடி பதிவான செல்போன் என்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செல்போன் எண்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அவற்றில் 5 எண்கள் ஒரே நேரத்தில் பலமுறை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதை தனிப்படை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
இதனை முக்கிய தடயமாக கைப்பற்றியுள்ள தனிப்படை போலீசார் ராஜஸ்தான் கொள்ளை கும்பலுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கின்றனர். இதனால் அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.