நாளை (31) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை நாட்டில் குறிப்பாக வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும்.
ஊவா , கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மற்றும் மாதுறு ஓயா பகுதிகளில் மணிக்கு சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.
இதேவேளை, கடந்த 27ம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நாட்டின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும்.
மின்னலிலிருந்து ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.