தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், கவர்னர் நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?.
பதில்:- தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமல்ல, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அனைவரும், இதுகுறித்து முறையிட ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். 31-ந்தேதி (நாளை) நேரம் ஒதுக்கித்தருவதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், சந்திப்புக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் 31-ந்தேதி தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் முறையிடுவார்கள்.
கேள்வி:- உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பீர்களா அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறீர்களா?.
பதில்:- சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். புற்றுநோய் வருவதற்கு காரணமான குட்கா போதைப்பொருட்கள், போலீஸ் உயரதிகாரியான ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மாமூல் கொடுத்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை நாங்கள் ஆதாரங்களோடு, குட்கா விற்பனை செய்த கடைகளின் முகவரிகள் மற்றும் புகைப்படங்களோடு சட்டமன்றத்தில் காண்பித்தது உண்மை.
ஆனால், அதன் மீது இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது 40 நாட்கள் கழித்து உரிமைக்குழு நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்ன என்று நேற்றே தெரிவித்து இருந்தேன்.
இன்றைக்கும்கூட குட்கா விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. இந்தநிலையில்தான், அவர்கள் எங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதுகுறித்து நாங்கள் எங்களுடைய சட்ட வல்லுநர்களோடு கலந்துபேசி, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் சந்தித்து, பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய சட்டசபையில் குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.