இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. குறித்த நாடுகளுடன் நட்புகொண்டு பிரச்சினைகள் இல்லாமல் தொடர்ந்து பயணிப்போம். அத்துடன் இந்த நாடுகளின் நிதி உதவிகளை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 1100 குடும்பங்களுக்கு வீட்டு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவே வீட்டு திட்டத்தை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் வீட்டு திட்டங்கள் வலுவானதாக இருக்கவில்லை. இது வரைக்கும் வீட்டு திட்டத்திற்காக 2200 கோடி ரூபாவை செலவிட்டுள்ளோம்.
இதன்படி நாம் தொடர்ந்து வீட்டு திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவோம்.இந்நிலையில் தற்போது நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். நாம் ஆட்சி பீடமேறும் போது சுற்று வட்டம் பூராகவும் கடன் சுமை காணப்பட்டது.
நாட்டிலுள்ள கடன் சுமையை தீர்க்க முடியாத காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு வருடங்களுக்கு முன்பே தேர்தலை நடத்தினார். அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கடன் செலுத்த முடியாது என்றே எம்மை பார்த்து கூறினர். எனினும் நாம் இரு வருடங்களில் கடன் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து விட்டோம் . அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா நிறுவனத்துடன் கைகோர்த்து அரச, தனியார் கூட்டு பங்காண்மை மூலமாக முன்னேற்றவுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக கடன் சுமையை மேலும் குறைக்க முடிந்தது.
தேசிய அரசாங்கம் இவ்வளவு கடன் சுமைக்கு மத்தியிலும் பெற்றோல் , சமயல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து, வருமானத்தை அதிகரித்தது. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். இரு வருடத்தில் இரண்டரை இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். எனவே பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் தற்போது நாம் இந்தியாவுடன் நல்ல நட்பை வைத்து கொண்டுள்ளேம். எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சீனாவுடனும் ஐப்பானுடனும் அமெரிக்காவுடனும் ரஷ்யாவுடனும் எந்தவொரு பிரச்சினையும் எமக்கு இல்லை. ஆகவே இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளுடன் நட்பு கொண்டு பிரச்சினைகள் இல்லாமல் தொடர்ந்து பயணிப்போம்.
ஜப்பானின் நிதி உதவியுடன் கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம். அத்துடன் அதிவேக வீதி, மேல் மாகாண மாநகர வேலைத்திட்டம், சுற்றுலா துறை உள்ளிட்ட அனைத்து துறையையும் நாம் வளர்ச்சிக்கு உட்படுத்தவுள்ளோம்.மேலும் திருகோணமலை, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். மேலும் வடக்கு, மலையகம், கிராமிய பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.
இதன்படி 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் செய்யப்படும். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் முழுமையான கடன் சுமையை நாம் இல்லாமல் செய்வோம் என்றார்.