நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்! – யாழ் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்
“எமது சமூகத்தை, எமது இனத்தை, எமது கலை கலாசாரத்தை சீரழிக்க முயலும் பிற சக்திகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாம் இனங்கண்டு. அவற்றுக்கு அடிமைகள் ஆகாமல் நல்லதொரு ஆரோக்கியமான, அன்புறவுள்ள ஒரு சமூகமாக வாழவும், ஏனையவர்களுக்கு உதவுகின்றவர்களாக சமூக, மத, பேதமின்றி நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்.”
27.08.2017 அன்று ஊர்காவற்றுறை புனித மரியன்னை ஆலயத்தில் தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற தீவக மறைக்கோட்ட தூய யோசேவாஸ் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் மேற்கண்டவாறு கூறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்து தனது உரையில்:
“ஓல்லாந்தர்களின் கொடுங்கோல் ஆட்சியின் அடக்கு முறைக்குள்ளே இந்த இலங்கைத்தீவு விழுந்திருந்த காலப்பகுதியிலே கத்தோலிக்க குருக்கள் பலர் ஒல்லாந்தர்களால் கொல்லப்பட்டபொழுதும் கூட, தனது உயிரைத் துச்சமென மதித்து, முப்பது ஆண்டுகளாக எந்த அருட்சாதனங்ளையும் பெறமுடியாமல் இருந்த கத்தோலிக்க மக்களுக்குப் பணிசெய்ய வேண்டும் என்ற அவாவில், இந்தியா கோவாவில் இருந்து புறப்பட்டு, மன்னார் சவுத் பாரில் வந்தியற்கிய யோசேவாஸ் அடிகளார், ஒரு பிச்சைக்காரன் வேடத்தில் கால்நடையாக யாழ்பாணம் வந்து, சில்லாலையிலும், அதை அண்டிய பகுதிகளிலும், வாழ்ந்த கத்தோலிக்க மக்களை இனங்கண்டு, இரவு வேளைகளில் அவர்களை ஒன்று கூட்டி, அவர்களுக்கு அருட்சாதனைங்களை வழங்கி, திருப்பலி நிறைவேற்றி, ஒல்லாந்தர்களுக்கு பயந்து ஒடுங்கி வாழ்ந்த கத்தோலிக்கர்களின் காவலனாய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து மக்களுக்கா தனது பணியை ஆற்றி வந்தார். இதன் பொருட்டு இவர் சிறை செல்லவும் தயங்கவில்லை. இறுதி வரை இந்த இலங்கைத் தீவில் கால்நடையாகவே பூநகரி, கிராஞ்சி, முழங்காவில், கண்டி என்று மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த யோசேவாஸ் முனிந்திரருக்கு இந்த யோசேவாஸ் ஆண்டிலே, இன்று இந்த ஊர்காவற்றுறை மரியன்னை தேவாலயத்திலே விழா எடுப்பதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். இன்னும் சிறப்பாக இவ்வரங்கிலே புனித யோசேவாஸ் அடிகளாரின் நினைவாக “மறை காத்த மாவீரன்” என்ற நாட்டுக்கூத்தினை குருமட மாணவர்களாக இருக்கும்போது முன்னர் வழங்கியிருந்தவர்கள், இன்று யாழ் மாவட்ட குருக்களாக வழங்குவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்பு, கருணை, இரக்கம், பரிவு, பொறுமை, தாழ்மை, சகிர்ப்புத்தமை, விட்டுக்கொடுப்பு போன்ற சிறப்பான பண்புகளைக் கொண்டது இந்த கத்தோலிக்க சமயம். இந்த பண்புகளை தமது வாழ்வில் கொண்டு, சிறப்பாக இந்த தீவகத்திலே தொன்று தொட்டு இன்று வரைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள். குறிப்பாக இங்கே பல தேவாலயங்கள் புராண வரலாற்றைக் கொண்ட தேவாலயங்களாக இருப்பதுடன், இங்கிருந்து இறை பணிக்கழைக்கப்பட்ட ஆயர்கள், குருக்கள், துறவிகள் என ஏராளம் உள்ளனர். இப்படியாக இந்த தீவகத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கான தொடர்பு ஒரு நீண்ட வரலாறாக அமைந்திருக்கின்றது. அப்படியாக இருக்கக்கூடய இந்த தீவகத்தலே வாழுகின்ற மக்களாகிய நீங்களும், அன்போடும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் ஐக்கியத்தோடும், ஏனைய மதத்தவர்களையும் நீங்கள் உங்களைப் போல் நேசித்து, அனுசரித்து, விட்டுக்கொடுத்து, வாழ்ந்து வருகின்றீர்கள். தொடர்ந்தும் நீங்கள் இப்படியே வாழ வேண்டும்.
எமது நாட்டினை நாம் பார்ப்போமாகில் யாழ்ப்பாண இராட்சியம், கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம் என்று கண்டிவரை வியாபித்திருந்த எமது தமிழர் இராச்சியங்களில், ஒல்லாந்தர், போத்துக்கியேர், ஆங்கிலேயர் என்று அந்நியர்களால் எமது நாடு அடிமைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அவர்களுக்கு எதிராக எமது தமிழ் மன்னர்கள் குதிரையேறி, வாள் ஏந்திப் போராடிய காலம் அது. நீங்கள் எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக அவர்கள் எங்களைப் பாதுகாப்பதற்காக, எங்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, சமயம், மொழி, நிலம் அனைத்தையும் பாதுகாப்பதற்காக போராடியிருந்தார்கள். போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று தொடராக வந்த அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக குறிப்பாக எமது மன்னர்களாகிய சங்கிலி மன்னன், சங்கிலி குமாரன், புவிராஜபண்டாரம், எல்லாளன், பண்டாரவன்னியன் இன்னும் குளக்கோட்டன், வெடியரசன் என்று பல மன்னர்கள் எங்கள் மண்ணைப் பாதுகாப்பதற்காக, எங்கள் மொழியைப் பாதுகாப்பதற்காக, எங்களுடைய சமயத்தைப் பாதுகாப்பதற்காக, எங்களுடைய கலையை கலாசாரத்தை, பண்பாடுகளை காப்பதற்காக அவர்கள் போராடிய வரலாறு எங்கள் மத்தியிலே இருக்கின்றது. ஆனால் இன்று எங்களுடைய இளைஞர்கள் எங்களுக்கு எதிராகவே வாளைத்தூக்கி ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்கும் நிலை எங்கள் மத்தியிலே அதிகரித்து வருகின்றதை நீங்கள் அனைவரும் காண்கின்றீர்கள். குறிப்பாக தீவகத்திலே அந்தக் கலாசாரம் இன்னமும் வரலில்லை. தீவகம் என்பது மிகவும் அமைதியாகவும், சமாதானமாகவும், அன்புள்ளம் கொண்ட ஒரு உறவுகளாகவும் வன்செயல்கள், வன்முறைகள் எதுவும் இல்லாத ஒரு பூமியாக இருக்கின்றது. ஆனால் அது தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும்.
அது எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளிலேயும் தான் இருக்கின்றது. ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இப்படியான சமூகப் பிறழ்வுகள் எல்லாமே எங்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. வளர்க்கப்படுகின்றது. நாங்கள் ஒரு கட்டுக்கோப்பான இனமாக, கட்டுக்கோப்பான சமூகமாக எங்களுடைய கலையை, கலாசாரத்தை, பண்பாட்டை, விளையாட்டை, மொழியை, எங்களது கல்வியை, தொழில்துறைகளை கட்டிக்காத்து நாங்கள் வளர்ந்து வரக்கூடாது, நாங்கள் ஒரு மோசமான இனமாக இருக்கவேண்டும், எங்களை அழிக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். எனவே எங்கள் இளைஞர்கள் மத்தியிலே போதைவஸ்து, குடிபோதை போன்ற கலாசார சீரழிவுகளை விதைத்து விட்டால் அப்படியே அவர்கள் அழிந்து போவார்கள், அவர்களிடம் எந்த விதமான கொள்கைகளும் கட்டுக்கோப்புக்களும் இருக்காது என்றே இந்த திட்டமிட்ட சதி செயலின் பின்னணியிலேயே இப்படியான சம்பவங்கள் எல்லாம் ஊக்குவிக்கப்படுகின்றன. இதையெல்லாம் யார் செய்கின்றார்கள் என்பதும், யார் இதற்காக நிதி வழங்குகின்றார்கள் என்பதும், இதனை யார் ஊக்குவிக்கின்றார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.
தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்கள் இறைவனுக்குள்ளே ஐக்கியமாய் வாழவேண்டும் என்று தன் உயிரைத் துச்சமாக மதித்து, பல துன்பங்கள் துயரங்களுக்கு முகங்கொடுத்து இந்த மக்களுக்காகவே வாழ்ந்த புனித யோசேவாஸ் அடிகளாருக்கு நாம் விழா எடுக்கும் இந்நாளிலே அவரை நாங்கள் மகிமைப்படுத்தி கனம் பண்ண வேண்டும் என்றால் அவர் எமக்கு எதை விட்டுச் சென்றாரோ அதனை நாங்கள் பின்பற்ற வேண்டும். எமது சமூகத்தை, எமது இனத்தை, எமது கலை கலாசாரத்தை சீரழிக்க முயலும் பிற சக்திகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாம் இனங்கண்டு, அவற்றுக்கு அடிமைகள் ஆகாமல் நல்லதொரு ஆரோக்கியமான, அன்புறவுள்ள ஒரு சமூகமாக வாழவும், ஏனையவர்களுக்கு உதவுகின்றவர்களாக சமூக, மத பேதமின்றி நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்” என்றார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும், தீவக மறைக்கோட்ட குருக்கள், அருட்சகோதரிகள், மறைக்கோட்ட மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்கள், பொதுநிலையினர், ஆர்வலர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.