கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் பிரான்சிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மியான்மருக்கு செல்ல உள்ளார்.
இத்தாலியில் உள்ள வத்திகான் அரண்மனை இதனை அறிவித்துள்ளது.
புத்த மதத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவரும் மியான்மர் நாட்டில் சிறுபான்மையினத்தவர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களுக்கான சம உரிமைக்காக போராடி வருகின்றனர்.
இவர்களில் சிலர் ஆயுதமேந்திய புரட்சிப் படையினராக இயங்கி வருகின்றனர்.
அவ்வப்போது இடம்பெறும் இவர்களது போராட்டம் அரசுப் படைகளால் அடக்கப்படுவதும், பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் மீண்டும் போராட்டம் வெடிப்பதும் இங்கு இயல்பாக உள்ளது.
அண்மையில் தலைதூக்கிய ரோஹிங்கியா போராட்டத்தில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இராணுவத்தால் அடித்து விரட்டப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான பங்காளதேசம் எல்லைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், ரோஹிங்கியா முஸ்லிம் சகோதரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை மியான்மர் அரசு அளிக்க வேண்டும் என்ற கருத்தை சுமார் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் பிரான்சிஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அவர்களது போராட்டம் வெற்றிபெற நல்லமனம் கொண்ட மக்கள் உதவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மியான்மர் நாட்டுக்கு போப் பிரான்சிஸ் செல்வதாக இத்தாலியில் உள்ள வத்திகான் அரண்மனை அறிவித்துள்ளது