அரசியல் யாப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மகிந்த அணியினரால் மாத்திரம் 7 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
அவற்றில் ஏற்கனவே இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாமும் நேற்று ஒரு எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் ஏனைய எதிர்ப்பு மனுக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
அதேநேரம் தேர்தல் கண்காணிப்ப அமைப்பான பெஃப்ரல் மற்றும் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் என்பவையும் நேற்றையதினம் எதிர்ப்பு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தன.
மாகாண சபைத் தேர்தலை ஒரே நாளில் வைப்பதற்கு ஏதுவான வகையில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் வடமத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட போதும், ஊவா மாகாண சபையில் தோல்வி அடைந்தது.
அத்துடன் இந்த சட்டமூலத்தை காலந்தாழ்த்தும் யோசனை ஒன்று தொடர்பில் நேற்றையதினம் மேல் மாகாண சபையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
அதேநேரம் இந்த சட்ட மூலத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் நிலை இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் கூறி இருந்த நிலையில், இது வடமாகாண சபையிலும் நிறைவேற்றப்படுவதில் சந்தேகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.