நாட்டின் சட்டம் மற்றும் சுயாதீனம் தொடர்பில் உண்மையான அபிப்ராயங்களை தெரிவித்துவிட்டு இரண்டு வருடம் சிறைக்குச் செல்ல தயாராகவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்காக பொதுபலசேனாவின் உறுப்பினர் ஒருவரும்,மற்றுமொரு நபரும் தனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும்,தற்போது சட்டத்தரணிகள் சங்கமும் வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ள ரஞ்சன், தான் எந்த வழக்கிற்கும் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் அனைத்து சட்டத்தரணிகள,நீதிபதிகள் மீதும் குற்றஞ்சுமத்தப்படவில்லை என்றும்,மண்டியிட்டு வணங்க கூடிய நீதிபதிகள் உள்ளதாகவும்,இதற்கு உதாரணமாக வடக்கில் உள்ள நீதிபதியின் செயற்பாடுகளை குறிப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் கொலைகாரர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கொலைக்காரர்களை காப்பாற்றும் சட்டத்தரணிகளும் உள்ளதாகவும்,தான் சட்டம் மற்றும் நீதிமன்றத்தை மதிப்பதாகவும்,சிறைக்குச் செல்ல தயாராகவிருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.