சசிகலாவை நீக்க எடப்பாடி அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தினகரன் அணியும் முயற்சிக்கிறது.
அ.தி.மு.க.வில் அதிகாரமிக்க பதவி பொதுச் செயலாளர் பதவி. பொதுச் செயலாளராக இருப்பவர்தான் கட்சியின் கொள்கை முடிவு, முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். கட்சியின் நிர்வாகிகள் நியமனம், நீக்கம், அங்கீகரித்தல் அனைத்தும் பொதுச் செயலாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
முக்கியமாக தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களுக்கு பொதுச் செயலாளர் அங்கீகார கடிதம் கொடுத்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.எனவே அதிகாரம் மிக்க இந்த பதவியை கட்சி தலைவர்தான் கையில் வைத்திருப்பார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரே, பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்தார்.
பொதுக் குழு உறுப்பினர்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். அந்த பொதுக்குழுவில் தான் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூட்டப்பட்ட பொதுக் குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.ஆனால் அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கியது. கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் ஜெயிலுக்கு சென்ற சசிகலா துணை பொதுச் செயலாளர் பதவியை தினகரனிடம் வழங்கி கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை அவருக்கு கொடுத்தார்.ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இணைப்புக்கு பிறகு அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது.
எடப்பாடி ஆதரவாளர்கள் பலரை கட்சிப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமியையும் மாவட்டசெயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். தினகரனின் நீக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் சசிகலாவை பொதுச் செயலாளராக இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரன் எடுத்து வரும் நடவடிக்கைகள் செல்லுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர்.எனவே பொதுக்குழுவை கூட்டி சசிகலா நீக்கத்துக்கு ஒப்புதல் பெற்று புதிய பொதுச் செயலாளரை தேர்வுசெய்ய திட்டமிட்டுள்ளார்கள். பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதியை இன்று முடிவு செய்கிறார்கள்.
பொதுக் குழுவில் 3-ல் 2 பங்கு ஆதரவை பெறுபவர்தான் பொதுச் செயலாளராக வரமுடியும். தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் பேரின் ஆதரவை பெறுபவர்களே பொதுச்செயலாளராக வரமுடியும்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை முறைப்படி பொதுக்குழுவில் மனுதாக்கல் செய்து தேர்தல் முறையில்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி இல்லாததால் அப்போது பிரச்சினை எழவில்லை.
முதல் முறையாக இப்படி ஒரு நெருக்கடியான சூழலை அ.தி.மு.க. சந்திக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு சசிகலாவை நீக்க எடப்பாடி அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அதை முறியடிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தினகரன் அணியும் முயற்சிக்கிறது. மாவட்ட வாரியாக பொதுக் குழு உறுப்பினர்களை வளைக்கும் முயற்சியில் இரு தரப்பும் மும்முரமாக உள்ளன.
பொதுக் குழுவை கூட்டி யாரை பொதுச் செயலாளராக தேர்வு செய்கிறார்களோ அந்த முடிவு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணைய அங்கீகரிப்புக்கு பிறகுதான் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும். கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொள்ள முறைப்படி அங்கீகாரம் கிடைக்கும்.எனவே கட்சியை கைப்பற்றுவதில் தினகரனும், எடப்பாடி, ஓ.பி.எஸ். அணியும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறது. சாதிக்கப் போவது யார்? என்பது விரைவில் தெரிந்து விடும்.