ஒருங்கிணைந்த அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் ஒன்றிணைந்தபின்னர் கட்சியில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. தினகரன் தலைமையிலான அணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சர் பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்ற அவர்கள், அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தினகரன் வெளியிட்ட நியமன உத்தரவுகள் செல்லாது, அ.தி.மு.க.வுக்கு சொந்தமான ஊடகங்களை (நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி) மீட்டு கட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டுவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா, புரட்சி தலைவி அம்மா அணிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ந்தேதி காலை 10.35 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.