பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இறுதிகட்ட பணியான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை (புதன்கிழமை) பகல் 1.59 மணிக்கு தொடங்கி 31-ந் தேதி மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.