எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார். கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம் தெரிவித்தார்.
உண்மையில் இந்த உரையாடல் முழுவதையும் என்னால் பூரணமாக நினைவுபடுத்த முடியாவிட்டாலும் கூட, இதுவே அதன் சாராம்சமாக இருந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அரசாங்கத்துடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில் தாம் ஈடுபடுவோம் எனவும் கரிகாலன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்களை விடுதலை செய்யப்பட்டால் 24 பேரைக் கொண்ட எமது குழுவைத் தாம் விடுவிப்பதாகவும் புலிகள் தெரிவித்தனர். இதற்கான கடிதத்தை எழுதுவதில் நாமும் ஆர்வம் கொண்டோம். ஏனெனில் எம்மை விடுதலை செய்வதற்கான எவ்வித நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதை நாம் கண்டுணர்ந்தோம். அமைதித் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்பதை மட்டுமே எம்மால் கற்பனை செய்ய முடிந்தது. இதனால் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுத நாம் சம்மதித்தோம்.
நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுதிய கடிதம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்காக அப்போதைய அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் வழங்கப்பட்ட பதிலானது இவ்வாறான ஒரு குழு கைது செய்யப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்பது போல் அமைந்திருந்தது.
இந்தக் கைதிகள் மரணித்த வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கருதியதாகக் கூறுமாறு பாதுகாப்புச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும், புத்தக விற்பனையாளரான விஜித யாப்பா, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக Newsweek மற்றும் National Geographic ஆகியவற்றின் பிரதிகளை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். A Long Watch
அரசாங்கத்தின் பதிலானது இரக்கமற்றதாகவும் அலட்சியம் நிறைந்ததாகவும் இருந்ததை நினைத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இராணுவ வீரர்கள் பிற வீரர்கள் இல்லாதவிடத்து அந்த இடத்தை நிரப்பீடு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறார்கள். உலகில் உள்ள எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் அவர்களது ஓய்வின் பின்னரும் இன்றும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பதைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் அல்லது சேவையிலிருந்த இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை எடுத்துப் பாருங்கள். சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரிடம் அவரது அரசாங்கம் அவரது விடுதலைக்காக எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினால் அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதைக் கேட்டுப்பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சமரசத்தையும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான சமிக்கையை அரசாங்கம் அனுப்பியது.
உண்மையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்களும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். ஏனெனில் இவர்களை சட்டரீதியாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்பதனால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, முல்லைத்தீவில் யுத்தம் இடம்பெற்றது. வழமைபோன்று எமது சிறைக் காவலர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்தில் வெற்றி பெற்றதைக் கூறினார்கள். முல்லைத்தீவிலிருந்த இராணுவ முகாமைப் புலிகள் முற்றுமுழுதாக அழித்தனர். இதில் 1200 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் தரப்பில் யுத்த ரீதியான வெற்றிகள் கிடைத்த வேளைகளில் அவர்கள் பேசுவதற்குத் தயாராக இருந்தனர். அவர்களது தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்ட வேளையில், அவர்கள் அமைதியுடன் இருந்தனர்.
பெரியமடுவில் நாங்கள் இருந்தபோது ஒருநாள், தமிழீழ விடுதலைப் புலிகள் வெலிஓயா முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இவர்களது தாக்குதல் திட்டங்கள் தொடர்பான தகவலை சிறிலங்கா இராணுவம் முன்னரே அறிந்து கொண்டனர். இதனால் புலிகள் தமது முகாமிற்குள் நுழையும் வரை காத்திருந்த இராணுவத்தினர் அவர்கள் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இருநூறு அல்லது முந்நூறு வரையான பெண் போராளிகள் கொல்லப்பட்டனர் என நான் நினைக்கிறேன்.
இதனால் புலிகள் எம்மீது தமது அதிருப்தியை காண்பித்தனர். அதாவது எமக்கான உணவு நேரந் தவறி வழங்கப்பட்டது. அத்துடன் உணவு ருசியற்றதாகவும் காணப்பட்டது. எமது சிறையில் மேலும் சிறைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மை வந்து பார்க்கும் வரை புலிகளின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை எங்களால் அறியமுடியவில்லை. அதன் பின்னர் நாங்கள் செய்தித்தாள்களை வாசித்து உண்மை நிலையை அறிந்து கொண்டோம்.
ஆனால் பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள். நாங்களும் ஒரு குழுவாக சிறையில் இருந்ததால் தனிமை என்ற உணர்வைப் பெற்றிருக்கவில்லை. மூத்த மற்றும் வயது கூடியவர் என்ற வகையில் அந்தக் குழுவைத் தலைமை தாங்கும் பொறுப்பும் எனக்கு ஒப்படைக்கப்பட்டது.
நான் ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டது போன்ற உணர்வைக் கொண்டிருந்தேன். தற்போது எனக்கு அதிக வேலை இருந்தது. அது மட்டுமே எனது மனதை ஆக்கிரமித்திருந்தது. இது என்னை மனதளவில் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தியிருந்தது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மைப் பார்க்க வருகின்ற நாட்கள் தவிர்ந்த மற்றைய நாட்களில் எனது குழுவைச் சேர்ந்த அனைவரையும் சந்திப்பதற்கான அனுமதி எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சிலவேளைகளில் எமக்கு அருகிலுள்ள சிறைக கூண்டுகளிலிருந்து மற்றைய சிறைக் கைதிகள் பேசுவது எமக்குக் கேட்கும். எம்மைக் கண்காணிப்பதற்கு எமக்கு அருகில் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் சிறைக்கம்பிகளின் ஊடாக நாங்கள் உரையாடுவோம்.
எம்மைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட சிறைக் காவலர்கள் எம்மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எமது சிறைக்கூண்டுகளைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். இது நாங்கள் சிறைக்கைதிகள் என்பதைத் தொடர்ந்தும் நினைவுபடுத்துவதாக இருக்கும்.
எமக்குப் பரிச்சயமான புலி உறுப்பினர்களையும் நாங்கள் பார்க்க முடிந்தது. நாம் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கு கபிலன் என்பவர் பொறுப்பாக இருந்தார். ஆனால் அவர் அரிதாகவே எம்மை வந்து பார்ப்பார். நாங்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தோம். செல்வரட்ணம் என்பவர் எம்மை ஒவ்வொரு நாளும் வந்து பார்ப்பார். எமக்குக் காவலாக இருந்தவர்களில் சிலர் இளவயதினர். அவர்களுக்கு பதினெட்டு வயது கூட இருக்காது என நான் நினைக்கிறேன். அவர்கள் எம்மீது சிறிது நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோன்று நாங்களும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் எப்போதும் எமது சிறைக்கூண்டின் வாசலில் ஆயுதம் தரித்த ஒரு காவலாளி நிற்பார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான விரிவான சிறை வலைப்பின்னலைக் கொண்டிருந்தனரா என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயமாகும். இந்த சிறைகள் பல்வேறு நோக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது புலிகள் தமது தேசத்துரோகிகளைத் தடுத்து வைப்பதற்காகவும், அமைப்பிற்குள் பிரச்சினைக்கு உள்ளாகும் புலி உறுப்பினர்களைத் தடுத்து வைப்பதற்காகவும், ஒழுக்கத் தவறாக நடந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வேற்று ஆயுதக்குழுக்களுடன் தொடர்பைப் பேணுபவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களையும் அடைத்து வைப்பதற்காகவே புலிகள் இவ்வாறான சிறைகளை உருவாக்கியிருந்தனர்.
நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையின் மூலையிலிருந்த சிறைக்கூண்டில் பெரிய உருவத்தைக் கொண்ட மனிதர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு அமைப்பொன்றின் தலைவர் போன்றிருந்தார். நான் அவர் யார் என வினவியபோதும் எவரும் எனக்குப் பதிலளிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். பின்னர் ஒருநாள் அவர் அங்கிருந்து வேறிடம் சென்றுவிட்டார்.
நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சிறிலங்கா உலகக் கிண்ணக் கோப்பையை வென்றெடுத்திருந்தது. இதனை எமக்குக் காவலாளியாக இருந்த புலி உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருந்தார். அவர்களும் சிறிலங்கா வெற்றி பெற்றதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருந்தனர். துடுப்பாட்டம் என்ற வகையில் புலிகள் அமைப்பினரும் விதிவிலக்காக இருந்தனர்.
அவர்கள் இதனை சிறிலங்கா அணி என அழைக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டின் புதிய பெயரைப் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணிக்கு ஆதரவளித்தனர். அவர்கள் சனத் ஜெயசூரிய மற்றும் அர்ஜுன ரணதுங்கவின் மிகப் பெரும் ரசிகர்களாக இருந்தனர். முத்தையா முரளிதரன் என்கின்ற தமிழர் ஒருவர் புதிதாக சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இணைந்துள்ளமை தமக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தம்மிடம் இருந்த சிறிய வானொலியில் உலகக் கோப்பை அணியின் இறுதி நாள் நேரடி வர்ணனையைக் கேட்பதற்கு புலிகளின் சிறைக் காவலர்கள் எம்மை அனுமதித்தனர். உண்மையில் அவர்கள் வைத்திருந்த வானொலியின் ஒலிபரப்பை எம்மால் சரியாகக் கேட்க முடியவில்லை. ஆனாலும் அந்தத் தருணம் உண்மையில் மறக்க முடியாத ஒன்றாகும். அதற்கு முன்னர் சிறிலங்கா ஒருபோதும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு ஒருபோதும் தெரிவாகியிருக்கவில்லை. எங்களில் பெரும்பாலானவர்கள் துடுப்பாட்ட வீரர்களாக இருந்தோம். சிறிலங்கா உலகக் கோப்பையை வென்றெடுத்த போது, சிறைக் காவலர்கள் எம்முடன் இணைந்து ஆரவாரித்தனர்.
ஆனால் அதன் பின்னர் பல நாட்கள் வழமைபோன்று கழிந்தது. பின்னர் ஒருநாள் காவலாளிகள் எம்மிடம் வந்து புறப்படுவதற்குத் தயாராகுங்கள் எனக் கூறினார்கள். நாங்களும் புறப்பட்டோம். ட்ரக் வண்டி ஒன்றில் நாங்கள் ஏற்றப்பட்டோம். பின்னர் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
குறிப்பு –
( 1994 ஆண்டு மன்னார் – சிலாவத்துறையில் சாகரவர்த்தன ரோந்துக் கப்பல் மீதான தாக்குதலில், அதன் கட்டளை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட கடற்புலிகளால் போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தார். ஆறு ஆண்டுகளின் பின்னர், 2002 ஆம் ஆண்டு அவர், போர்க்கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். போர்க்கைதியாக புலிகளிடம் இருந்த அனுபவங்களை கொமடோர் அஜித் போயகொட, எழுத்தாளர் சுனிலா கலப்பதி மூலம், “A Long Watch – War Captivity and return in sri lanka“ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.இந்த நூலின் ஒரு பகுதியே இது.)
ஆங்கிலத்தில் – அஜித் போயகொட ( சுனிலா கலப்பதி)
வழிமூலம் – dailyo
மொழியாக்கம் – நித்தியபாரதி