இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது

372 0

இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள் எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

தாய் மொழிக்கல்வி மிகவும் சிறப்பானது. ஆனால் உயர் கல்வி அல்லது சர்வதேச தரத்திலான சட்டம் உள்ளடங்கலான கல்வியறிவை பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில மொழி அத்தியவசியமாகிற்று.

அப்பொழுது புறக்கணிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படவில்லை.

தமிழ் மொழியில் கற்பிப்பு தொடங்கியதும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக மாறியது. அதனால் இரண்டாம் மொழியைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் குறைந்துள்ளனர்.

மாணவர்களும் அதில் நாட்டம் கொள்வதாகத் தெரியவில்லை. இன்று எம்மிடையே உயர் கல்வி பெற்ற பலர் ஆங்கிலத்தைப் பிழையாக எழுதிப் பேச எத்தனிக்கையில் பரிதாபமாக இருக்கின்றது.

இங்கிருக்கும் இளைஞர் யுவதிகள் கற்றறிந்தவர்களாக கல்வியில் மேம்பட்டவர்களாக உலக தரத்தில் பேசப்படுபவர்களாக மாற வேண்டுமாயின் அவர்கள் முறையாக வழிகாட்டப்பட வேண்டும்.

இன்று எமது இளைஞர் யுவதிகள் பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்களாக இருப்பினும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிய களமொன்று அமைக்கப்படாமையால் முறையான வழிகாட்டல்கள் இன்றி அவர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடத் துணிந்துள்ளார்கள்.

அதீத திறமையுடையவர்கள் தொடர்ச்சியாக ஏதாவது கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஓய்வில் இருப்பதென்பது அவர்களுக்கு விருப்பமற்ற ஒரு செயல். அவ்வாறானவர்கள் கவனிப்புக்கள் இன்றி விடப்படும் போது குற்றச் செயல்களில் அவர்களின் நாட்டம் தாவுகின்றது.

இலங்கையில் காணப்படுகின்ற பட்டப்படிப்புக்களில் பெரும்பாலானவை சான்றிதழ் கற்கை நெறிகளாகவே காணப்படுகின்றன. அவர்களது கற்கை நெறிகள் முடிவடைந்ததும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி முறையான திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு இல்லை.

பல்கலைக்கழகங்களும் பல புதிய புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கின்றன. அவற்றைக் கற்று முடித்த பின்னர் அம் மாணவ மாணவியர் அக் கற்கை நெறி சார்ந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வழிமுறைகள் எதுவும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பது மனவருத்தத்திற்குரியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a comment