கிழக்கில் அவசர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விசேட ஆராய்வுக் கூட்டம்

226 0
மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கல், அப்பிரதேசங்களை புனருத்தாரண, புனரமைப்புச் செய்கின்ற வேலைகள் நடைபெற்றாலும், அவற்றினை நடைமுறைப்படுத்துவற்கான பொருள்கள், உபகரணங்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பி.சுரேஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட ஆராய்வுக் கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூட்த்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பி.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திருகோணமலை மாவட்ட உதவிச் செயலாளர் என் பார்த்தீபன், அம்பாறை மாவட்ட செயலக பிரதிப்பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், திணைக்களத்தலைவர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முதல் பகுதியில், மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வீடுகளின் கட்டுமான வேலைகளின் போதான கட்டடப்பொருள்களின் கிடைக்கும் தன்மை, சுகாதார மருத்துவ வசதிகளில் உள்ள பிரச்சினைகள், கல்வி, போக்குவரத்து, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குமு; நகரங்களுக்குமிடையிலான போக்குவரத்து வசதிகள், மீன்பிடித்துறையில் உள்ள பிரச்சினைகள், சுற்றாடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

இரண்டாவது பகுதியில், கமநல அபிவிருத்தித் திணைக்களம், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை, நீர் வள அபிவிருத்தி சபை, விவசாயத் திணைக்களம், சமூக நீர்வழங்கல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த செயலாளர் பொறியியலாளர் பி.சுரேஸ் வடக்குக் கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின், மீள்குடியேற்ற அமைச்சினால் வீடு வழங்கும் திட்டமும் அப்பிரதேசங்களை புனருத்தாரண, புனரமைப்புச் செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான கட்டட உபகரணங்கள் போதாமை காரணமாக அத்திட்டங்களின் அபிவிருத்தி நிலை எதிர்பார்த்த அடைவைக் கொடுக்க முடியாமலிருக்கின்றது. எனவே இந்த மக்களின் தேவைக்காக திணைக்களங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளை அழைத்து ஆராய்ந்தோம்.

கடந்த வருடத்தில் 11ஆயிரம் வீடுகளை அமைத்திருக்கிறோம். வீடு அமைப்பு எதிர்வரும் 3 வருடங்களில் வருடத்துக்கு 40 ஆயிரம் என்ற கணக்கில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட இருப்பதனால், இவற்றினை எவ்வாறு கட்டிமுடிக்கலாம், அவற்றுக்கான பொருள்களை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம், சேமிக்கலாம் என்பது பற்றியும், இந்தப்பிரதேச மக்களின் வேலை வாய்ப்புக்களை வழங்கலாம்.

அத்துடன், இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்கையில் நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம் என்பது பற்றியும் ஆராயந்து அறிக்கை தரும்படி எங்களது அமைச்சர் சுவாமிநாதன் கோரியிருக்கிறார். அதன்படி முதலாவது கூட்டம் கிழக்கிலும், அடுத்து வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களிலும் நடத்தப்பட இருக்கின்றன.

40 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிப்படைத் தேவையான மணல் கற்களை நாங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம், நீரைச் சேமிக்கக்கூடிய இடங்களில் அந்த மணலை பெற்றுக் கொள்ள முடியும்.

அதனால் அந்த மணலைப் பயன்படுத்தி கற்களை உற்பத்தி செய்யலாம், அக்கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கலாம் என்ற எண்ணத்தோடு அமைச்சரின் ஆசீர்வாதத்தோடு இங்கு முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ச்சியாக இவ்வாறான திட்டங்களுக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. அவருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் இன்னும் பல அபிவிருத்தி வேலைகளும் நடைபெறவிருப்பதனால் தொடர்ந்தும் அரசாங்க அதிபர்களின், அதிகாரிகளின் உதவிகளை நாடியிருக்கின்றோம். எதிர்காலத்தில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a comment