கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதி மற்றும் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுகின்றது.
மண்ணுக்காக போராடிய பின்னரும் மண் கொள்ளையர்களிடம் இருந்து மண்ணுக்காக மீண்டும் அகிம்சை வழியில் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் வாகனேரி பகுதியில் தவணை கண்டம், பள்ளக்கட்டு;, தரசேனை கண்டம், மக்குளான கண்டம், பள்ளிமடு கண்டம், அடம்படி வட்டவான் பருத்திச்சேனை கண்டம் மற்றும் பொண்டுகள்சேனை உட்பட்ட பகுதிகளில் தினமும் மண் சூரையாடப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவ்விடயமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பதாக தெரியவில்லை.
இவ்விடயம் தொடர்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல தடவைகள் போராட்டங்கள் நடாத்தி உள்ளனர்.
பல்வேறுபட்ட மகஜர்களையும் வழங்கி உள்ளனர். எந்தவித கரிசனையும் காட்டப்படவில்லை.
இப்பகுதியில் மண் அகழ்வு நடைபெறும் இடமானது விவசாயிகளுக்கு வாகனேரி குளத்தில் இருந்து வாய்க்கால் ஊடாக தண்ணீர் செல்லும் வாய்க்கால் மண்ணை தோண்டுகின்றது.
2500 ஏக்கர் விவசாய நிலத்தை நம்பி வாழும் விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் வரட்சி காரணமாக விவசாயத்தை விடும் நிலையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.