சோமாலியா: அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

217 0

சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து அல் கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினர், பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த
கூட்டுப்படையினருக்கு அமெரிக்கா அரசு ஆதரவளித்து வருகிறது. கூட்டுப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று, அப்பகுதியில் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக கூட்டுப்படையினர் முதலில் அறிவித்தனர். அதன்பின்னர், இத்தாக்குதலில் சில சோமாலிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட யாரும் தீவிரவாதிகள் இல்லை, அனைவரும் சாதாரண பொதுமக்கள் தான் என இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மேலும் பலியான பத்து பேரில் மூன்று பேர் குழந்தைகள் எனவும், அந்த மூவருக்கும் எட்டு முதல் பத்து வயதுக்குள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment