காங். அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

216 0

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மணவெளி தொகுதி பூரணாங்குப்பத்தில் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க.வை எதிர்க்கிறது. புதுவையில் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது. இதனால் தான் புதுவையில் தமிழக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க அனுமதித்து பாதுகாப்பு அளிக்கின்றனர். இதன் மூலம் காங்கிரசின் இரட்டை வேடம் தெரிய வருகிறது.

அ.தி.மு.க.வுக்குள் நிலவுவது உள்கட்சி விவகாரம். இதில் பா.ஜனதா தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

புதுவை நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை தொடர்ந்து மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இதற்கான விளைவை விரைவில் காங்கிரஸ் அரசு சந்திக்கும்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

Leave a comment