புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு

219 0

புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மனு அளித்துள்ளார்.

தினகரனின் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புதுவை சன்வே ஓட்டலில் தங்கி உள்ளனர். கடந்த 3 நாட்களாக இவர்கள் சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஓட்டலில் தங்கி இருந்தனர்.

இவர்களை புதுவையில் தங்க அனுமதிக்க கூடாது என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர் கலெக்டர் சத்யேந்திரசிங், போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் ஆகியோரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தார். இதையடுத்து சீனியர் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் மற்றும் தாசில்தார் தயாளன் ஆகியோர் தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த சின்னவீராம்பட்டினம் ஓட்டலை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் ஓம்சக்தி சேகர் இன்று போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் தங்க வைப்பதினால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும். அதோடு அவர்கள் தங்குவதற்கு எந்த ஒரு ஓட்டல் நிர்வாகங்களும் அறைகள் தர தயாராக இல்லை.

ஆனால், ஒரு ஓட்டல் நிர்வாகத்தை மிரட்டி அறைகள் பெற்றுள்ளனர். தற்போது 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இடம்மாறி உள்ளனர். பிரதான சாலையில் இந்த ஓட்டல் உள்ளது. இதனால் அண்டை மாநிலத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் வர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே புதுவையில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்க அனுமதிக்க கூடாது.இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

Leave a comment