வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணாமல் போதல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு மைத்திரி – ரணில் அரசு பொறுப்புக்கூற தவறினால் வடக்கில் அரச இயந்திரம் முற்றாக முடங்கும் வகையில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளயாழ்.பொது சன நூலகத்தில் ஒன்று கூடிய 54 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மீனவ அமைப்புக்கள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்பவை இணைந்து இம்முடிவை அறிவித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்த பொங்கு தமிழின அடுத்த வடிவமாக இம்மக்கள் போராட்டங்கள் அமையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் கூடிய இக்கூட்டத்தினில் கூட்டமைப்பினில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகியவையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்டவற்றுடன் யாழ்.பல்லைக்கழகத்தின் அனைத்து அமைப்புக்களும் குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள், கிராமிய அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் என பலவும் பங்கெடுத்திருந்தன.
கடந்த காலங்களில் பரவலாக மக்கள் போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களினிலும் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இனியும் அவற்றை பொருட்படுத்தாது போன்று இலங்கை அரசு இருக்க முடியாது. முந்திய மஹிந்த அரசிற்கு கொஞ்சமும் குறையாது தற்போதைய மைத்திரி – ரணில் அரசம் இருப்பதாக கலந்து கொண்ட அனைத்து தரப்புக்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன.
இம்முறை அரசு கண்டு கொள்ளாது தான் நினைப்பதை தான் முன்னெடுக்குமானால் வடக்கின் அரச இயந்திரத்தை முழுமையாக முடக்கும் வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஊடகங்களிடையே பேசிய சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் பொது அமைப்புக்கள், சங்கங்கள் என பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களுடன் தமிழரின் இன்றைய நிலையில் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய மக்கள் அணிதிரட்டல்கள் சம்மந்தமாக கலந்தாலோசித்து திட்டங்கள் தீட்டிய கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.