செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவு தின அஞ்சலி நிகழ்வில், செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி மகிழினியின் உறவினர் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்ததுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
யாழ். நூலகம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கைப் பிரிக்கும் பிரதான வீதியில் (முனியப்பர் கோயிலுக்கு முன்பாக) இந்த வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், பங்கெடுத்தவர்கள் அனைவரும் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
இதன் போது, செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவர்களுக்கான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதி கிடைத்தாலே தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கிடைத்துவிடும். நீதி கிடைப்பதற்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு குரல்கொடுக்க முன்வர வேண்டுமென மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினார்கள்.
குறித்த செஞ்சோலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட, 61 மாணவிகளையும் நினைவு கூரும் வகையில், அவர்களின் பெயர்களுடன் தற்காலிக கல்லறைகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 31 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.