கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய முடியும் என சட்டமா அதிபர் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரண பரிசோதனையின்போது விலக்கப்பட்ட உடற் கூறுகள் காணாமல்போனமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதி மன்றாடியார் நாயகம் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்வந்துள்ள சாட்சிகளின் அடிப்படையில், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலுள்ள, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட உடற்கூறுகள் அடங்கிய 17 பொதிகளையும் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.