வடமாகாண புதிய சுகாதார அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

371 0

வடமாகாண சுகாதார அமைச்சராக நேற்று பதவி ஏற்ற ஞானசீலன் குணசீலனுக்கு எதிராக, டெலோ இயக்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கி, அவருக்கு பதிலாக மற்றுமொரு டெலோ உறுப்பினரான விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்திருந்தது.

எனினும் அவரை நிராகரித்த வடக்கு முதலமைச்சர், அதே கட்சியைச் சேர்ந்த ஞானசீலன் குணசீலனை சுகாதார அமைச்சராக நியமித்ததுடன், போக்குவரத்து அமைச்சுப் பதவியை தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன் சுகாதார அமைச்சராக செயற்படுவதற்கான தகுதியின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், கட்சி நலனைக் காட்டிலும், ஆட்சி நலன் முக்கியமானது என்றும் விளக்கமளித்து, விக்னேஸ்வரன் நேற்று டெலோ இயக்கத்தின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இந்த கடிதம் தொடர்பில் டெலோ இயக்கத்தின் செயலாளர் என்.சிறிகாந்தா கருத்து தெரிவித்தார்.

இந்த கடிதத்துக்கு தாம் மறுபதில் வழங்கவில்லை என்றும், ஆனால் கட்சி ஒருவரை பரிந்துரைத்தும் அவர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த குணசீலன் கட்சித் தீர்மானத்தை புறக்கணித்து நேற்று அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றது தவறு என்று குறிப்பிட்டார்.

இதனால் குணசீலனுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.
அத்துடன் எத்தகைய காரணம் கூறப்பட்டால், முதலமைச்சர் தங்களது பரிந்துரையை மீறி வேறொருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கிய தவறு என்றும் சிறிகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment