வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும் – நிலாந்தன்

889 0

குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக வாசித்தேன். தமிழ் முகநூல்ப் பக்கங்கள் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் வாழ்வை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. எனினும் ஒரு நபரின் முகநூல் பதிவிற்கூடாக அவருடைய உளவியலை ஓரளவிற்கு நுட்பமாகக் கண்டுபிடிக்கலாம் என்று சில மேற்கத்தேய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மேற்படி முகநூல் வாசிப்பிற்கூடாகப் பெற்ற தொகுக்கப்பட்ட ஒரு சித்திரத்தை பின்வருமாறு விபரிக்கலாம்.

1. மேற்படி இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் 1990களின் நடுக்கூறில் பிறந்தவர்கள். அதாவது குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலகட்டத்தில் பிறந்த பிள்ளைகள்.

2. இவர்கள் எல்லாருடைய கணக்குகளும் ஏறக்குறைய ஒரே தன்மையானவை. ஒரு நபரே பல்வேறு பெயர்களில் பொய்க் கணக்குகளைப் பேணுகிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது.

3. இவருடைய முகநூல் எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சியான மாற்றத்தை பார்க்க முடிகிறது. தொடக்க காலங்களில் தமிழ்த்திரை நட்சத்திரங்களை போற்றுகிறார்கள். காதல் பற்றியும், காதல் தோல்வி பற்றியும், வீரம் பற்றியும் இலட்சிய வாசகங்களை அதிகம் பதிகிறார்கள். திரை நாயகர்களின் படங்களை அதிகம் பகிர்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் தாங்களே தங்களைக் கதாநாயகர்களாகப் பாவனை செய்து தமது சொந்தப் படங்களைப் பகிர்கிறார்கள்.

4. இவர்களுடைய முகநூல்க்கணக்குகள் பெரும்பாலானவற்றில் மறைப்புக்கள் குறைவு. தமது அடையாளங்களையோ, தமது குடும்பப் பின்னணிகளையோ அவர்கள் மறைக்க முயலவில்லை. தொழில்நுட்பத்தால் பரகசியமாக்கப்பட்ட ஒரு சாகச உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். தமது சாகசங்களைப் பகிர்வது தமக்குப் பாதுகாப்பற்றது என்பதைக் கூட உணர முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். தமது உறவுகளையும், தமது தொடர்புகளையும் முகநூலில் பதியும் ஒருவர் எப்படி ஒரு ரகசிய அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம்?

5. தமிழ் மக்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுகிறார்கள். கரும்புலிகள் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் போன்றவற்றை நினைவு கூருகிறார்கள்.

6. நல்லூரடியில் நீதிபதியின் மெய்க்காவலர் கொல்லப்பட்ட விடயத்தில் சமூகத்தின் பொது உளவியலை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

7. பெற்றோலியக் கூட்டுததாபனத்தின் வேலை நிறுத்தத்தின் போது படையினர் எரிபொருள் விநியோகத்தை கையில் எடுத்ததைப் பாராட்டுகிறார்கள்.

8. முகநூலில் பகிரங்கமாக பொலீசுக்கு சவால் விடுகிறார்கள். கூராயுதங்களோடு காட்சி தருகிறார்கள்.

9. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரளவிற்காவது படித்திருக்கிறார்கள் அல்லது பாடசாலை இடைவிலகிகள். சிலர் படித்த குடும்பப் பின்னணிகளைக் கொண்டவர்கள்.

மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது சில விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. தமது பதின்மவயதுகளில் திரை நாயகர்களையும், அவர்களின் சாகசங்களையும் வியந்து போற்றிய இவ் இளைஞர்கள் முதிரும் பொழுது தாங்கள் எப்படிக் கதாநாயகர்களாக மாறலாம் எதைச் செய்தால் சமூகம் தங்களை உற்றுக் கவனிக்கும் என்று சிந்திப்பது தெரிகிறது. அதாவது எது வீரம்? எது சாகசம்? எது தியாகம்? எது மெய்யான கதாநாயகத் தனம்? போன்ற விடயங்களில் முன்னுதாரணம் மிக்கவர்கள் யாருமற்ற ஒரு வெற்றிடத்தில் இவர்கள் வன்முறையின் வழியில் தங்களை நிறுவிக்கொள்ள முற்படுகிறார்கள். சமூகத்திலிருந்து ஏதோ ஒரு அல்லது பல காரணங்களால் அந்நியப்பட்ட இவர்கள் தங்களுடைய முதன்மையை சமூகத்தில் நிறுவிக்கொள்வதற்காக வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்.போட்டிக்கல்வி முறைமையினால் கழித்துவிடப்பட்டு அல்லது இந்தச் சமூகம் விழுமியம் என்று தூக்கிக் கொண்டாடும் அளவுகோள்களால் கழிக்கப்பட்ட பொழுது ஏற்பட்ட விரக்தியும் தனிமையும் அவர்களை வேறொரு திரட்சிக்கு இட்டுச்சென்று விட்டது. அதாவது சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் கல்விக்கட்டமைப்பிலிருந்தும், மத நிறுவனங்களிலிருந்தும் குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் அந்நியமாக்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். யாருடைய சொன்னால் இவர்கள் கேட்பார்கள்? என்று சொல்லத்தக்க ஆளுமைகள் இவர்களுடைய குடும்பங்களுக்குள் இருக்கவில்லை, ஆசிரியர்களுக்குள் இருக்கவில்லை, சமூகப் பெரியார்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகளுக்குள் இருக்கவில்லை.முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில் வழிதவறிப் போன இளைஞர்களா இவர்கள்?

மேற்படி வாசிப்பு சில ஆண்டுகளிற்கு முன்பு கவிஞரும், விமர்சகருமான மு.பொன்னம்பலம் எழுதிய ஒரு கட்டுரைக்குப் பொருந்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணமா? அல்லது வாள்ப்பாணமா? என்ற தலைப்பில் தினக்குரலில் நான் எழுதிய கட்டுரையைத் தொட்டு மு.பொன்னம்பலம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இளைஞர்களின் வன்முறைக்கு மேற்கண்டவாறு கோட்பாட்டு விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

ஆனால் பொலிசார் முதலில் கூறினார்கள். வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணயில் முன்னாள் இயக்கத்தவர்களே இருப்பதாக. அதே சமயம் தரைப்படைத் தளபதி கூறுகிறார் சில முன்னாள் இயக்கத்தவர்களுக்கு இவ்வன்முறைகளில் ஏதும் தொடர்புகள் இருக்கலாம் என்பதற்காக எல்லாரையும் குற்றங்கூற முடியாது என்று. வடக்கில் ஏதேனும் சிறு சம்பவம் இடம் பெற்றால் அதனை பெரிதுபடுத்துவதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இதனை விடவும் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அது குறித்து பேசப்படுவதில்லை எனவும் தரைப்படைத்தளபதி அண்மையில் தெரிவித்துள்ளார். படைக்கட்டமைப்பைச் சேர்ந்த மற்றொரு பிரதானியான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறுகிறார் “யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எந்தவிதமான வன்முறை சம்பவங்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட எந்தவொரு விடுதலை புலி உறுப்பினருக்கும் தொடர்பில்லை” என்று. அதைத் தான் நம்பிக்கையோடும் பொறுப்போடும் தெரிவிப்பதாக மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறுகிறார். ஒரே படைக் கட்டமைப்பிற்குள் பொலிசார் ஒருவிதமாகவும், இராணுவத்தினர் வேறொரு விதமாகவும் கருத்துத் தெரிவிக்கும் அக முரண்பாட்டை எப்படி விளங்கிக்கொள்வது?

கொழும்பைத் தளமாக கொண்டியங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் இந்த முரண்பாடு ரணில் மைத்திரி அரசாங்கத்தின் அகமுரண்பாடே என்று கூறுகிறார். ஆவாக்குழுவை கோத்தபாய ராஜபக்ஷவே உற்பத்தி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அமைச்சர் ராஜித சேனரத்தினவும், சில தமிழ் அரசியல்வாதிகளும் அப்படித்தான் கூறுகிறார்கள். ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் இவ்வாறு கூறுவதையிட்டு அரசாங்கம் ஏன் இதுவரையிலும் விசாரிக்கவில்லை? என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்புகிறார். அண்மையில் விமல் வீரவன்ச தெரிவித்த ஒரு கருத்திற்காக அவர் விசாரிக்கப்பட்டார். ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வீரவன்ச மேற்படி பதினொரு பேரும் புலிகளின் ஆட்கள் என்றும் புலிகளுக்காக வெடிபொருட்களைக் கொண்டு வந்தவர்கள் என்ற தொனிப்படவும் கூறியிருந்தார். இவ்வாறு கூறியதற்காக புலனாய்வுத் துறையினர் அவரை விசாரித்தார்கள். ஆனால் அமைச்சர் ராஜிதவை அல்லது கோத்தபாயவை ஏன் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வியெழுப்பினார். அமைச்சர் ராஜித கூறுவது போல மேற்படி இளைஞர்களை படைப்புலனாய்வுத் துறையே பின்னிருந்து இயக்குகிறது என்றால் இப்பொழுது அவர்கள் கைது செய்யப்படுவதின் பின்னணி என்ன? இதற்கு பின்வரும் விடைகள் உண்டு.

1. அவர்களுடைய தேவை முடிந்து விட்டது. நல்லாட்சி முகமூடியை அணிந்திருப்பதற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள். எனவே அவர்களை அரங்கிலிருந்து அகற்ற வேண்டும்.
2. வடக்கில் படையினரின் பிரசன்னத்தை தொடர்ந்தும் பேண இது உதவும்.
3. அண்மை வாரங்களாக குடாநாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பொலிஸ் தரப்பை அதிகம் சீண்டியிருக்கின்றன. குறிப்பாக நல்லூரடியில் நீதிபதியின் மெய்க்காவலர் கொல்லப்பட்ட சம்பவம் நந்தாவில் வாள்வெட்டுச் சம்பவம், வடமராட்சியில் பொலிசாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஆகிய மூன்று சம்பவங்களும் பொலீசுக்குப் பயப்படாத ஒரு பகுதி இளைஞர்கள் வன்முறையைக் கையிலெடுத்திருப்பதைக் காட்டுகிறது.

எனவே நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டிய ஒரு தேவை நல்லாட்சி அரசாங்கத்திற்கு குறிப்பாகப் பொலீசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் அதிரடிப்படையினரைக் களத்தில் இறக்கியதும் இந்த அடிப்படையில்தான். பொலிசின் சீருடை வேறு. அதிரடிப்படையின் சீருடை வேறு. அது அதிகம் இராணுவத்தனமானது. கிழக்கில் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான குரூரமான நடவடிக்கைகள் மூலம் போர்க்குற்றச்சாட்டுக்களிற்கு இலக்காகியிருக்கும் ஒரு படைப்பிரிவு அது. எனவே அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயப்பிராந்தியை உண்டாக்கினார்கள். அதில் முன்னாள் இயக்கத்தவர்களை சம்பந்தப்படுத்தியதும் ஓர் உளவியல் உத்திதான். இதன் மூலம் முன்னாள் இயக்கத்தவர்களை குற்றவாளிகளாகக் காட்டலாம்.

இவ்வாறாக அதிரடிப்படையின் சோதனை, சுற்றிவளைப்பு, முறியடிப்பு நடவடிக்கைகளின் மூலம் நிலமை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது போல ஒது தோற்றம் எழுந்துள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தின் இருள் மறைவுகளிலும் ஆளரவம் குறைந்த சந்து பொந்துகளிலும் இரவில் போதையோடும், கூரான அல்லது கூரற்ற ஆயுதங்களோடும் ஆங்காங்கே உலவும் எல்லா இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாக கருத முடியாது. அவர்களைக் கைது செய்வதன் மூலமாகவும், கடுமையாகத் தண்டிப்பதன் மூலமாகவும் நிலமைகளை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்பலாம். ஆனால் தமிழ்த் தலைவர்களும், கருத்துருவாக்கிகளும், சிவில் சமூகங்களும் அப்படி நம்ப முடியாது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமது இளைஞர்களின் வீர தீரச் செயல்களையும், தியாகத்தையும் பிரமிப்போடு பார்த்த ஒரு சமூகம் இன்று தனது இளைஞர்களில் ஒரு பகுதியினரை அதிரடிப்படையைக் கொண்டு வந்து கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறதா? சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இருந்து விலகி சமூகத்திலிருந்தும் அதன் விழுமியங்களிலிருந்தும் அந்நியப்பட்டுச் செல்லும் இளைஞர்களை தண்டிப்பது மட்டும்தான் தீர்வா? இவ்வாறு இளைஞர்கள் சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் அந்நியப்படுவதற்கு சமூகமும், குடும்பமும் பொறுப்பில்லையா? எமது பிள்ளைகளின் கைகளில் யாரோ சில உள்நோக்கமுடைய புறத்தியார் கஞ்சாவைக் கொடுக்கிறார்கள் என்றால் எமது பிள்ளைகளின் மீதான எமது கட்டுப்பாட்டை நாம் எப்பொழுது இழந்தோம்? எமது பிள்ளைகளின் கைகளில் உள்நோக்கமுடைய வெளியாட்கள் சிலர் வாள்களை கொடுக்கிறார்கள் என்றால் எங்கள் பிள்ளைகளின் மீதான எமது கண்காணிப்பை நாம் எப்பொழுது இழந்தோம்? எங்களுடைய பிள்ளை தனது கைபேசியில் தனது முகநூலில் என்ன செய்கிறது என்பது எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? எங்களுக்கும் எங்களுடைய பிள்ளைகளுக்குமிடையே புறத்தியார் நுழையத்தக்க ஓர் இடைவெளி எப்படி ஏற்பட்டது? இதை வெறுமனே கட்டமைக்கப்ட்ட இனப்படுகொலையின் ஓரங்கம் என்று கூறிவிட்டு எதிர்த்தரப்பை மட்டும் பிழை சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? எமது பிள்ளைகளுக்கும் எங்களுக்குமிடையிலான இடைவெளியை குறைப்பது எப்படி? எப்பொழுது?

ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளரான மருத்துவர் சில மாதங்களுக்கு முன் சொன்னார். “எங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கும் ரியூட்டரிகளுக்கும் காவிக்கொண்டு திரிவதிலேயே எங்களுடைய நேரமெல்லாம் போகிறது. பொதுக் காரியங்களில் ஈடுபடுவதற்கும், சந்திப்புக்களில் கலந்து கொள்வதற்கும் நேரம் கிடைப்பதில்லை” என்று. ஒரு புறம் யாழ்ப்பாணம் தனது பிள்ளைகளை பூனை தன் குட்டிகளைக் காவுவது போல காவிக்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் குட்டிகளுக்கும், பூனைகளுக்குமிடையே வெளியிலிருந்து நரிகள் உள்நுழைந்து விட்டன. முதிரா இளம்பராயத்தவர்களை இப்பொழுது ஸ்கிறீன் ஏஜர்ஸ் (screenagers) என்று அழைக்கிறார்கள். பிள்ளைகள் உயர் தொழில்நுட்பத் திரைகளில் எதைப் பார்க்கிறார்கள் என்பது கணிசமான தொகை பெற்றோருக்குத் தெரியாது. உயர் தொழிநுட்பமானது தலைமுறைகளுக்கிடையே இடைவெளிகளை அதிகப்படுத்தியுள்ளது. உற்பத்தி சக்திகளோடு நேர்த்தொடர்பை இழந்த புதிதாக எழுச்சி பெற்று வரும் நடுத்தர வர்க்கமொன்று விழுமியங்களை இழந்து காணப்படுகிறது. இவ்வாறு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, விழுமிய நீக்கம் செய்யப்பட் ஓர் இளம் தலைமுறை இலகுவாக தொழிநுட்பத்தின் கைப்பாவையாகிறது. வெளித்தரப்புக்களின் கைப்பாவையாகிறது.

எமது இளைஞர்களில் ஒரு பகுதியினர் வாளோடு நிற்பது என்பது ஒரு விதத்தில் எமது கல்வி முறையின் தோல்வி. எமது விழுமியங்களின் தோல்வி, எமது குடும்ப உறவுகளின் தோல்வி, எமது சிவில் சமூகங்களின் தோல்வி, எமது மத நிறுவனங்களின் தோல்வி எல்லாவற்றையும் விட குறிப்பாக எமது அரசியல்வாதிகளின் தோல்வி. முன்னுதாரணம் மிக்க தலைவர்களாக சமூகச் சிற்பிகளாக எத்தனை அரசியல்வாதிகள் எம்மத்தியில் உண்டு? வெள்ளையும் சொள்ளையுமாக, மாலையும் கழுத்துமாக மேடைகளில் தோன்றும் பொழுதும் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுதும் இளைஞர்களை தமது தேவைகளுக்குப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் அவ்விளையோரில் ஒரு பகுதியினர் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுச் செல்லும் பொழுது அவர்களை அரவணைக்க முடியாதிருப்பது ஏன்?

ஒரு ஜனநாயகப் பரப்பில் சமூகத்தின் எல்லாச் செயற்பாடுகளையும், எல்லாத் தரப்புக்களையும் மக்கள் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் கட்டுப்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம். இக்கேள்வி நியாயமானதே. அதே சமயம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தனது சொந்தத் தற்காப்புக் கவசங்களை கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் அச் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுச் செல்லும் இளைஞர்களைக் குறித்து கவனம் செலுத்தவே வேண்டும். ஏனெனில் அது கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைக்குரிய களங்களில் ஒன்று. இப்பொழுது இடம்பெறும் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாமன்றத்தில் உரையாற்றினால் மட்டும் போதாது. மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. அல்லது தமிழ் இளையவர்களை பொலீசில் போய்ச் சேருமாறு ஆலோசனை சொன்னால் மட்டும் போதாது. அல்லது மைத்திரிக்கும், ஐ.நாவிற்கும் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. எல்லாவற்றிற்கும் முதலில் 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலைக் குறித்து ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ் ஒட்டு மொத்தத் தரிசனத்தின் பிரகாரமே ஒவ்வொன்றையும் திட்டமிட வேண்டும். இல்லையென்றால் ஐ.நாவிற்கு மட்டுமல்ல கடவுளுக்குக் கடிதம் எழுதினாலும் பதில் கிடைக்காது.

Leave a comment