ஆயுள்வேத மசாஜ் நிலையம் என்றபேரில் முன்னெடுக்கப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்டதில் 8 பெண்கள் உட்பட 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றுக்காலை பன்னிப்பிட்டிய மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுள்வேத மசாஜ் நிலையங்களையே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
பன்னிபிட்டிய – பெலென்வத்தை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பிலியந்தலை பொலிஸார் அங்கிருந்த 3 பெண்களை கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்கள் பெல்மடுல்ல, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 28, 29 மற்றும் 38 வயதுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, களனி – தலுகம பிரதேசத்தில் ஆயுள்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியொன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த குறித்த மசாஜ் நிலையத்ததை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 5 பெண்களுடன் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் 24, 35, 38, 27 மற்றும் 28 வயதானவர்கள் எனவும், தம்புள்ளை, களனி, கல்கமுவ, தெஹியத்தகண்டி, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள முகாமையாளர் வத்தளையைச் சேர்ந்தவரெனவும் உதவியாளர் லுனுகெட்டியவத்தையைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.