அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் வவுனியா மாவட்ட மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் பிரகாரம் புதிய அமைச்சருக்கு நேற்றைய தினம் இரவு வவுனியாவில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா – கோவில்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனின் நினைவிடத்திற்கு விஜயம் செய்த கந்தையா சிவனேசனுக்கு இளைஞர்கள் பட்டாசு வெடிக்க வைத்து வரவேற்பு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய கந்தையா சிவநேசனுக்கு, கழகத்தின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கினர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாகாண விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் என்று குறிப்பிட்ட அவர்,
அதனடிப்படையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருப்பதாகவும் குறுகிய காலத்திற்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.