சிம் அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்து பயன்படுத்துதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

213 0

உரிய முறையில் சிம் அட்டைகளை புகைப்படத்துடன் பதிவு செய்வதற்கான முறையினை பின்பற்றுமாறும் குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிம் (Subscriber Identification Module) அட்டைகளை பயன்படுத்தி இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் இடம்பெறுவதாக இணங்காணப்பட்டுள்ளதுடன், ஒருவர் பல சிம் அட்டைகளை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதால் கையடக்கத் தொலைப்பேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதையும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான தகவல்களை உள்ளடக்கி சிம் அட்டைகளை பதிவு செய்வது அத்தியவசியமாக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் உரிய முறையில் சிம் அட்டைகளை புகைப்படத்துடன் பதிவுசெய்வதற்கான முறையினை பின்பற்றுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் கையடக்கத் தொலைப்பேசி சேவை வழங்குனர்களிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியினை முறையாக மேற்கொள்வதற்காக 1991ம் ஆண்டு 25ம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் மூலம் வேண்டுகோள் விடுப்பதற்கும் குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment