மொழி அலுவலர்கள் 3,300 பேரை நியமிக்க நடவடிக்கை

232 0

 “சகல அரச நிறுவனங்களிலும் உள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3ஆயிரத்து 300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்” என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்றில் நேற்று (22) தெரிவித்தார்.  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, தேசிய நோயாக உள்ளதாகவும் அந்த நோயுள்ள இடத்தை அறிந்து அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். அரச திட்டங்கள் பலவற்றில் மக்களுக்கு அளிக்கப்படும் படிவங்கள் தனிச் சிங்கள மொழியில் இருப்பதால் அவற்றை உள்வாங்கிக்கொள்வதில் எமது மக்களுக்கு சிரமம் உண்டு. சிங்கள மொழியில் அமுல்படுத்தப்படுகின்ற திட்டங்கள், வெளியிடப்படுகின்ற ஆவணங்கள் மொழிபெயர்க்கும் திட்டம் உள்ளதா?” என டக்ளஸ் எம்.பி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் மனோ கணேசன் பதிலளிக்கையில், “காலத்துக்குப் பொருத்தமான, நாட்டுக்குப் பொருத்தமான, நல்லவொரு கேள்வித் தொகுப்பை தொடுத்திருக்கிறீர்கள். நாடு முழுக்க சிங்கள மொழியும் தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக கருதப்படுகிறது. அது சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருக்கிறது.

சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகிறேன்” என்றார்.

 

Leave a comment