சுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வழங்கிய உத்தரவு

214 0

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்த பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை மின்சார தூணில் கட்டி வைத்து பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொள்ளும் போது, அவரை கைது செய்யுமாறு அமைச்சர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக குற்ற விசாரணை பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதற்கு அடுத்த நாள் வேலணை பிரதேச சபையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் அறிந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குற்ற விசாரணை பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரான சுவிஸ் குமார் யாழ். நீதிவான நீதிமன்ற பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டுள்ளமையினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறு நீதவான் மொஹமட் மிலால் இதற்கு முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் குமார் என்ற சந்தேக நபரை விடுவித்தமை தொடர்பான முறைப்பாட்டினை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

சந்தேகநபரான சுவிஸ் குமார், உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனினால் ஊர்காவற்துறை நீதிமன்ற அதிகார பகுதியில் வைத்தே கைது செய்ப்பட்டுள்ளார்.

வித்தியாவின் கொலையும் குறித்த பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த முறைப்பாட்டினை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment