சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. இதன் அடிப்படையில் மாநிலத்தலைவர் பதவியில் இருந்து விலகும்படி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தனது பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார்.
மாநிலத்தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், மாணிக்தாகூர், செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒருவர் மீது ஒருவர் புகார்களை தேசிய தலைமைக்கு அனுப்பியதன் காரணமாக புதிய மாநிலத்தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல், தேசிய தலைமை திணறி வருகிறது.
மாநிலத்தலைவர் நியமிக்கப்படாததால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவ்வப்போது மாநில நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி வந்தனர். காமராஜர் பிறந்தநாள் அன்றும் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு கோஷ்டி தலைவர்கள் தனித்தனியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை (திங்கட்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய அங்கமாக தேசிய கொடியை யார்? ஏற்றி வைப்பது என்ற பிரச்சினை காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ளது. மாநிலத்தலைவர் இல்லாததால் வேறு யாரை வைத்து தேசியக்கொடியை ஏற்றுவது என்று கோஷ்டி தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ப.சிதம்பரம் ஆதரவாளரும், தென் சென்னை மாவட்ட தலைவருமான கராத்தே தியாகராஜன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளரும், மத்திய சென்னை மாவட்ட தலைவருமான ரங்கபாஷியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில நிர்வாகிகளான மாநில பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், அருட்பெத்தையா, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், ஹசீனாசயத், மத்திய சென்னை மேற்கு மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது, சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது. இது குறித்து கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘மாநிலத்தலைவர் யார்? என்பதை தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும். சுதந்திர தினம் அன்று சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கொடியேற்றுவார்’ என்றார்.
மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி கூறும்போது, ‘அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சின்னாரெட்டி சுதந்திர தினத்துக்கு வர உள்ளார். அவர் கொடியேற்றி வைப்பார்’ என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளருமான கோபண்ணா சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தனது அறையில் அமர்ந்திருந்த அவரிடம், சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, ‘மாநிலத்தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்து விட்டாலும், அடுத்த தலைவர் பெயர் அறிவிக்கப்படும் வரை அவர் தான் பொறுப்பு தலைவர். எனவே அவர் தான் இது குறித்து முடிவு செய்வார்’ என்றார்.
சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், தேசிய கொடியேற்றி சிறப்புரை வழங்குவது யார்? என்பது நாளை (திங்கட்கிழமை) தெரிந்து விடும்.