உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு

284 0

201608140631004711_Pakistani-vessel-carrying-explosives-Indian-security-forces_SECVPFபாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் வணிக கப்பல் ஒன்று வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கப்பல் மராட்டியம் அல்லது குஜராத் கடல் எல்லை வழியாகத்தான் இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சுதந்திர தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி இந்த எச்சரிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக கடற்படையினர் மும்பை கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் மும்பைக்குள் நுழையும் அனைத்து வணிக கப்பல்களையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறு கடலோர காவல் படையினருக்கும், மும்பை போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இது ஒரு முக்கிய எச்சரிக்கையாகும். இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து கப்பல்களையும் சோதனை செய்ய உள்ளோம். உளவுத்துறையின் தகவலின்படி மராட்டியம் அல்லது குஜராத்திற்கு தான் வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் வரும் என கூறப்பட்டுள்ளது. இரு மாநில போலீசாரையும் உஷார்படுத்தி உள்ளோம்” என்றார்.

“நாங்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். எனவே விபரீதங்கள் ஏதும் நடக்காது” என கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி டி.கே. சர்மா உறுதி அளித்துள்ளார்.