நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் 200 வீதத்தால் உயர்ந்துள்ளதாக பேராசிரியர் சேனக பிபிலே ஞாபகார்த்த அமைப்பின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவறாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கம் விலைக் கட்டுப்பாடு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலேயே மருந்துப் பொருட்களின் விலை 200 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இவ்வாறு மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்ததை சுகாதாரப் பிரிவு அமைச்சு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதனால் மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன.
மருந்துகளின் விலை உயர்வினால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்தப் பிரச்சனையிலிருந்து மக்களை மீட்பதற்கு அரசாங்கமோ சுகாதார அமைச்சோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருந்துப் பொருட்களின் விலைகக்ள குறைக்கப்பட்டதாக கடந்த காலத்தில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான நடைமுறைச்சாத்தியமான எந்தவொரு விடயத்தையும் அது மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தேசிய மருந்துப் பொருள் கொள்கைகளை பின்பற்றாமை, கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன நிறுவனங்களுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படாமை, மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யாமை என்பனவே இவ்வாறு மருந்துகளின் விலைகள் உயர்வடையக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.