முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில், அந்த முன்னணியுடன் சுற்றுப் பயணம் செல்ல ஷிரந்தி ராஜபக்ச திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய ஷிரந்தி ராஜபக்ச செயற்பாட்டு ரீதியான அரசியலில் பிரவேசிக்க உள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போது காணப்பட்ட மக்களின் ஆதரவு, ஊடகங்களில் வழங்கப்பட்ட விரிவான பிரசாரம் காரணமாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் ஆசியுடன் ஷிரந்தி ராஜபக்ச, செயற்பாட்டு ரீதியான அரசியலில் பிரவேசித்தால், கூட்டு எதிர்க்கட்சியில் பலர் அவருடன் இணைந்து கொள்ளவார்கள் என்பது பசில் ராஜபக்சவின் கணிப்பு.
ஷிரந்தி ராஜபக்சவின் இந்த திட்டத்தை அடுத்து பசில் ராஜபக்ச தனக்கு நெருக்கமான சிலருடன் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்காலம் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.