இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதலாக 2500 எம்.பி.பி.எஸ். இடங்களை தமிழக அரசு கேட்கிறது

276 0

இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதலாக 2500 எம்.பி.பி.எஸ். இடங்களை தமிழக அரசு கேட்டு வருகிறது.

நீட் தேர்வு குழப்பத்தால் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இன்னும் தாமதமாகி வருகிறது. கோர்ட்டுகளில் அடுத்தடுத்து தொடரப்பட்டு வரும் வழக்குகளால் மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளது.

நீட் தேர்வில் இருந்து ஒரு வருடத்திற்கு மட்டும் விலக்கு கொடுப்பதற்கான சட்ட வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டதால் விரைவில் அவசர சட்டமாக இயற்றப்படும்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் 22-ந்தேதி வரை கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் 22-ந்தேதிக்கு பிறகு தான் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது உறுதியாகி விட்டது.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 2500 எம்.பி. பி.எஸ். இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் தற்போது உள்ள 2652 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 58 இடங்கள் மீண்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. தவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் கூடுதலாக 100, 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் என உயர்த்தி கேட்பதன் மூலம் 2500 இடங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பெற திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தால் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அது மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் அது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சில அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைவாக உள்ளன. அவற்றில் இடங்களை அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்தால் தமிழ்நாட்டில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றார்.

Leave a comment