டெல்லியின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கேற்ப ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நடித்து வருவதாக சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதல்வரின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்று கூறினார். மேலும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் வெளிவர சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வம், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
டெல்லியின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கேற்ப ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நடித்து வருகின்றனர் என்று தனது பேட்டியில் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.