அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள ஒரு பூங்காவில் ராபர்ட் இ லீ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக அங்குள்ள சிலருக்கு தகவல் கிடைத்தது.
சிலை அகற்றுவதை கண்டித்து வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சார்லொட்டஸ்வில்லி நகரில் பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இனவெறிக்கு எதிரான குழுவினர் எதிர்ப்பு பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இனவெறி ஆதரவாளர்கள், அவர்களின் எதிர்ப்பாளர்கள் இருவருமே வன்முறை சம்பவத்திற்கு காரணம் என அதிபர் டிரம்ப் இந்த மோதலை கடுமையாக கண்டித்திருந்தார்.
இந்த இனமோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என அனைத்து தரப்பினரும் விமர்சித்து வந்த நிலையில், இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
சார்லொட்டஸ்வில்லி நகரில் ஊர்வலத்தில் பெண் கொல்லப்பட்டதை கண்டித்தும், இனவெறி எதிர்ப்பாளர்களின் குரல் அடக்கப்படுவதை கண்டித்தும் பேரணியில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர்.