ஜெர்மனியில் பிறந்த ‘பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா ‘ வின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம்!

1210 0

பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

யாருமே தொடுவதற்கு கூட அருவெறுப்பு அடையும் நிலையில் உள்ள தொழு நோயாளிகளை தொட்டு அவர்களுக்கு அன்புடனும்,ஆதரவுடனும் சிகிச்சை அளித்தவர் அன்னை தெரசா. இவரை போலவே, சேவை மனப்பான்மை கொண்ட ஒரு டாக்டர் பாகிஸ்தானில் சேவையாற்றி வந்தார்.

ஜெர்மனியில் பிறந்தவர் டாக்டர் ரூத் பாவ். இவர் 1960-ம் ஆண்டில் முதல் முதலாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்குள்ள கராச்சி நகரில் உள்ள ஒரு தொழு நோயாளிகள் இல்லத்தை தத்தெடுத்து தொண்டாற்றி வந்தார். மேலும், காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

பாகிஸ்தானில் முதன்முதலாக மேரி அடிலெய்ட் தொழுநோயாளிகள் பராமரிப்பு இல்லத்தை இவர் நிர்மானித்தார். இந்த அமைப்பின் சார்பில் தற்போது 800 பணியாளர்களுடன் 157 தொழுநோயாளிகள் புணரமைப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.

இவரது தொண்டை கவுரவித்து 1988-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கவுரவ குடியுரிமை வழங்கப்பட்டது. இவரது அயராத உழைப்பால் பாகிஸ்தானை தொழுநோயில் இருந்து விடுபட்ட நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ருத் கேத்தரினா மார்த்தாவை பாகிஸ்தானின் அன்னை தெரசா என்று அந்நாட்டு மக்கள் அன்புடன் அழைத்து வந்தனர். இவரது சேவையை பாராட்டி பாகிஸ்தான் அரசு பல மதிப்பு மிகுந்த விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 87 வயதான டாக்டர் ருத் கேத்தரினா மார்த்தா கடந்த சில வாரங்களாக வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார். கடந்த பத்தாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கராச்சி நகரில் வைக்கப்பட்டிருந்த ருத் கேத்தரினா மார்த்தாவின் இறுதி அஞ்சலி இன்று நடைபெற்றது. அந்நாட்டின் தேசிய கொடியால் மூடப்பட்டிருந்த அவரது உடலை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று பீரங்கி வாகனத்தில் வைத்தனர்.

சதார் நகர் பகுதியில் உள்ள புனித பாட்ரிக் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்ட பின்னர் மிக பழமையான கோரா கல்லறைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைன் மற்றும் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பஜ்வா, சிந்து மாகாண முதல் மந்திரி முராத் அலி ஷா, கவர்னர் முஹம்மது ஜுபைர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 19 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் உயர்வான அரசு பதவியில் இல்லாதவர்களின் உடல் அடக்கத்துக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவது இல்லை. முன்னர் ஈதி அறக்கட்டளையின் தலைவரும் பிரபல கொடை வள்ளலுமான அப்துல் சத்தார் ஈதி கடந்த ஆண்டு காலமானபோது 29 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.

அதன் பின்னர், தற்போது ருத் கேத்தரினா மார்த்தாவுக்கு அந்த மரியாதை கிடைத்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment