காலநிலையைக் காரணம் காட்டி வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கையில்,முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு பின் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும் பொருத்து தனி வீடமைப்பு திட்டம் காலநிலையைக் காரணம் காட்டி வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டமானது குளிரான காலநிலையைக் கொண்ட மலைநாட்டுக்குப் பொருத்தமானதாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்வது பொருத்தமானது என நம்புகின்றேன்.
எனவே இத்திட்டத்தை மலைந்நாட்டில் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையிடமும் இது தொடர்பாக ஆராயுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.