கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளார்.
தருமபுரத்தில் குடும்பமொன்று தமது வாழ்வாதாரமாக கோழி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் இந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்கருகிலிருந்து காவலரணில் காவலிலுள்ள இராணுவ வீரர் ஒருவர் ஒருநாள் இவர்களின் வீடு புகுந்து கோழியைத் திருடிச்சென்றுள்ளார்.
கோழி திருட்டுப்போவதைக் கண்ட வீட்டுக்காரர் கோழி களவெடுப்பதாக கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அனைவரும் இணைந்து கள்வனைத் துரத்தியபோது அருகிலிருந்த காவலரனுள் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குடும்பத்தினர் தர்மபுரம் காவல்துறையில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்தனர்.
குடும்பத்தினரின் முறைப்பாட்டையடுத்து குறித்த இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி வழக்கு நடைபெற்றபோது குற்றவாளியான இராணுவச்சிப்பாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது இராணுவச் சிப்பாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு 3000ரூபா தண்டப்பணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.