அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

355 0

hands of a prisoner on prison bars

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற இராசையா ஆனந்தராசாவை நேரில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் தன்னை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கடந்த 2012ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல்கைதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

குறித்த அரசியல் கைதி தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை முன்னெடுத்த உண்ணாவிரதத்தின்போது சிறை அதிகாரிகள் 6 பேர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஊசி ஏற்றியதால் தான் உடல், உள பபாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த இராசையா ஆனந்தராசாவை இன்னமும் வைத்தியரின் பரிசோதனைக்கு சிறை அதிகாரிகள் அனுப்பவில்லையெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், அவரை யாழ்ப்பாணச் சிறைச்சாலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் சென்று பரிசோதனை நடாத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.