சீனாவின் குயிசோ மாகாணத்தில் உள்ள காடை பண்ணைகள் மூலமாக அங்கு பறவை காய்ச்சல் பரவுவதை வேளாண்மைத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிசோ மாகாணத்துக்குட்பட்ட லுவோடியான் நகரில் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நகரையொட்டி ஏராளமான காடை வளர்ப்பு பண்ணைகள் இயங்கி வருகின்றன.
இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் காடைகளுக்கு H5N6 என்ற வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் பத்தாயிரம் காடைகள் வரை அடுத்தடுத்து இறந்ததாகவும் அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுமார் 8 ஆயிரம் காடைகளை அரசு அதிகாரிகள் கொன்று அழித்தனர்.
சீனாவில் இந்த ஆண்டில் பரவிய இரண்டாவது பறவை காய்ச்சலால் அங்குள்ள மக்களிடையே பீதி எழுந்துள்ளது. இத்துடன் சேர்த்து சுமார் இரண்டரை லட்சம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் H7N9 வைரஸ் தொற்றால் உண்டான பறவை காய்ச்சலுக்கு சீனாவில் 281 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், சீனாவில் தற்போது பறவை காய்ச்சல் பீதி பரவிவரும் அதேவேளையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலும் மழைக்காலத்தின் சமீபத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
குயிசோ மாகாணத்தில் பரவிய பறவை காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், காடை மற்றும் கோழி பண்ணைகள் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீன வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.