வெள்ளை மாளிகையில் தொடரும் அதிகாரிகள் பந்தாட்டம்

263 0

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப்-க்கு பிரச்சார யுக்திகளை வகுத்த ஸ்டீவ் பன்னான், வெள்ளை மாளிகையின் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஸ்டீவ் பன்னான். டிரம்புக்கான பிரச்சார யுக்திகளை ஸ்டீவ் நிர்வகித்து வந்தார். பின்னர், டிரம்ப் வெற்றி பெற்று, அதிபராக பொறுப்பேற்றதும் வெள்ளை மாளிகையின் நான்காம் நிலை உயரதிகாரியாக ஸ்டீவ் பன்னான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று தடாலடியாக ஸ்டீவ் பன்னான்-ஐ நீக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் உத்தரவுக்கு முன்பாகவே ஸ்டீவ் பன்னான் ராஜினாமா செய்ததாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. வெர்ஜினியா மாகாணத்தில் நடந்து வரும் இனமோதல்கள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீவ், வெள்ளை இன கோமாளிகள் என விமர்சித்திருந்தார். இதனால், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீப காலமாக வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் பந்தாடப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு காரணமாக வெள்ளை மாளிகையின் தகவல் பிரிவு இயக்குநராக இருந்த மைக் டுப்க் ராஜினாமா செய்தார். பின்னர், அப்பொறுப்புக்கு அந்தோனி ஸ்காராமுக்சை டிரம்ப் நியமித்தார். கடந்த மாதம் இவரையும் நீக்கி டிரம்ப் உத்தரவிட்டார்.

வெள்ளை மாளிகையின் ஊடக பிரிவு செயலராக இருந்த சீன் ஸ்பைசர் ட்ரம்ப் உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி விலகினார். அவருக்கு முன்னதாக வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரெய்ன்ஸ்-ம் டிரம்ப்பால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment