பார்சிலோனா தாக்குதல்: ஓட்டல் பிரீசரில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பிய இந்திய வம்சாவளி நடிகை

305 0

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த தாக்குதலில், இந்திய வம்சாவளி டிவி நடிகை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதி உள்ளது. அங்குள்ள ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் நேற்று சாலையை கடந்தபோது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பார்சிலோனா தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி டிவி நடிகையான லைலா ரூவாஸ் (46), பார்சிலோனா தாக்குதல் நடந்தபோது அருகிலுள்ள ஓட்டலின் பிரீசரில் ஒளிந்து கொண்டு தப்பித்தேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் எனது 10 வயது மகள் இனிஸ் கானுடன் விடுமுறையை கழிக்க பார்சிலோனா சென்றேன். அப்போது லாஸ் ராம்ப்லாஸ் பகுதியில் சாலையை கடந்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து திடீரென வேன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயந்துபோன நான் அருகிலுள்ள ஓட்டலுக்கு சென்று பிரீசரில் ஒளிந்து கொண்டேன். அனைவரையும் காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டினேன்.

ஆனால், துப்பாக்கி குண்டுகள் முழங்கும் சத்தம் அதிகமாக கேட்டது. போலீசார் ஒருவரை குறிவைத்து சுட தொடங்கினர். எங்களை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க வைத்த ஓட்டல் ஊழியர்களுக்கு நன்றி. ஐ லவ் யூ பார்சிலோனா’’ என பதிவிட்டுள்ளார்.

மொராக்கோவை பூர்வீகமாக கொண்ட தந்தைக்கும், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தாய்க்கும் பிறந்தவர் லைலா ரூவாஸ். இவர் பிரிட்டன் டிவியில் புட்பாலர்ஸ் வைப் மற்றும் ஹோல்பி சிட்டி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment