பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வில் சேர்ந்து படிக்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

353 0

இனி 600 மதிப்பெண்ணுக்குத்தான் தேர்வு என்றும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் வடிவமைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எந்தெந்த பகுதியில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 3 மணி நேர தேர்வு என்பது 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் 600-க்கு மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளது. பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். ஜூன் மாதம் நடத்தப்படும் தேர்வில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். மன உளைச்சல் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சிறப்பான கட்டமைப்பு வசதி, கழிப்பிட வசதியை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம், ஆந்திரா, மராட்டிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வருகின்ற பொது நுழைவுத்தேர்வை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள 52 ஆயிரம் வினாக் களை கொண்ட குறுந்தகடு (சி.டி.) தயாரிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 450 மையங் களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணை, பொது நுழைவுத்தேர்வுக்கான வினாக்கள் அடங்கிய குறுந்தகடு ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் பெற்றுக்கொண்டார். அப்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி உடன் இருந்தார்.

வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

மாணவர்களின் அக மதிப்பீட்டுக்காக மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது. அதாவது வருகை பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும், உள்நிலை தேர்வுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்ணும், ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் போன்றவற்றுக்காக அதிகபட்சம் 2 மதிப்பெண்ணும் அளிக்கப்பட உள்ளது.

வருகை பதிவை பொறுத்தமட்டில் 85 சதவீதத்துக்கு மேல் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், 80 முதல் 85 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.

உள்நிலை தேர்வை பொறுத்தமட்டில் பள்ளியில் நடத்தப்படும் சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. தொழிற்கல்வி செய்முறை பாடத்தை தவிர்த்து அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு மேற்கண்ட முறையில் கணக்கிடப்பட உள்ளது.தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் அக மதிப்பீட்டுக்கு 25 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும் வழங்கப்படும். செய்முறை அல்லாத பொதுப்பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு அளிக்கப்படும்.

தொழிற்கல்வி அல்லாத பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். 20 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

70 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 5 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தொழிற்கல்வி பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 3 மதிப்பெண் கேள்விகள் 13 கேட்கப்படும். அதில் 10 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அதில் 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 10 மதிப்பெண் கேள்விகள் 2 கேட்கப்படும். 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்துத்தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும். செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும். எழுத்துத்தேர்வு, அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.

மொழிப்பாடங்களில் தாள்-1, தாள்-2 ஆகிய இரண்டையும் சேர்த்து சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் 75 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment