ரஜினியின் அரசியல் முன்னோட்ட மாநாடு திருச்சியில் இடம்பெறவுள்ளதாக தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துக் கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா? நம்மை ரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா? என்று ஏங்கித் தவமிருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணி வேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்ல அரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தர வேண்டியுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்கு காந்திய மக்கள் இயக்கம் வருகிற 20ஆம் திகதி திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது.
காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்க இருக்கிறது என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.