ஹஜ் பெருநாளை முன்னிட்டு சகல அரச முஸ்லிம் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை விடுமுறை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாட்களில் மாற்றம் செய்யுமாறு முஸ்லிம் கல்விச் சமூகம் மற்றும் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் கல்வி அமைச்சிடம் விடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வேண்டுகோள்களைப் பரிசீலனை செய்த அமைச்சு மாணவர்களின் நலன் கருதி இம்மாற்றத்திற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
அமைச்சின் செயலாளரினால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு இம்மாற்றமானது பின்வருமாறு அமையப்பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இரண்டாம் தவணை விடுமுறையானது இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுடன் வழங்கப்பட்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் 28 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவிருந்தன.
இருப்பினும், அவ்வாறு குறித்த தினங்களில் பாடசாலைகளை மூடாது, ஆகஸ்ட் 21ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையான நாட்களில் தொடர்ச்சியாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 4,6,7 மற்றும் 8ஆம் திகதி ஆகிய 5 நாட்களுக்கு சகல முஸ்லிம் பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டடுள்ளது.
இதன்படி சகல முஸ்லிம் பாடசாலைகளும் 5 நாட்கள் விடுமுறையுடன் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 11ஆம் திகதி திறக்கப்படுமென பணிப்பாளர். குறிப்பிட்டார். அத்தோடு, இவ்வாண்டுக்கான முஸ்லிம் பாடசாலை களுக்கான மொத்த பாடசாலை நாட்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்