கொடநாடு எஸ்டேட்டில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு

268 0

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் என்பவரை தாக்கி கொலை செய்து கொள்ளை சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கொலை, கொள்ளை சம்பவத்துக்கு பின்னர் கொடநாட்டில் உள்ள 12 நுழைவு வாயில்களுக்கும் தலா 2 பேர் வீதம் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.இதுதவிர போலீசாரும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொடநாட்டில் ரோந்து சுற்றி வந்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லமும் நினைவிடமாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து உடனடியாக போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதே போல் கொடநாடு எஸ்டேட்டிற்கும் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட நேற்று மாலை முதல் கொடநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். மேலும் சந்தேக நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.அதோடு இல்லாமல் கொடநாடு காட்சி முனையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.

Leave a comment