ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

250 0

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம். இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றாலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முதன்முதலில் வலியுறுத்தியது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களால் இதுவரை என்ன பயன் ஏற்படும் என்பது பாமரனுக்குக் கூட தெரியும். இதுவும் பெயரளவுக்கு அமைக்கப்படும் ஆணையம் தான். அடுத்த 6 மாதங்களில் அதனிடமிருந்து ஓர் அறிக்கை பெறப்பட்டு, அது கிடப்பில் போடப்படும் சடங்கு அரங்கேற்றப்படும். எனவே, வெற்றுச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment